Thursday, February 22, 2024

Latest Posts

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் திணறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

‘வசதிபடைத்த பிள்ளைகள் பலர் தனியார் வகுப்புக்கு போகின்றார்கள் ஆனால் என்ர பிள்ளையள் வகுப்புக்கு செல்வதற்கு  பணம் இல்லாததால வகுப்புக்கு  போவதில்லை. பாடசாலை  தூரத்திலையே இருக்கின்றது பிள்ளைகள் நடந்து தான்  போறவங்க. சாப்பாட்டுக்கே  கஷ்டமான நிலையில் இருக்கும் போது பிள்ளை பாடசாலை போவதற்கு சைக்கிள் எவ்வாறு வாங்க முடியும்…’ என குடும்பத்தைத் தலைமை தாங்கும் பெண்ணான கலைச்செல்வன் பத்மினி  கூறுகிறார்.  

கலைச்செல்வன் பத்மினி முல்லைத்தீவில் வசித்துவரும் பெண் தலைமைக் குடும்பத்தை சேர்ந்தவர். 4 பிள்ளைகளுக்கு தாயாரான அவர், கூலி வேலை செய்து குடும்பத்தை நடாத்தி வருகிறார். இறுதி யுத்தத்தின்போது தனது கணவரை இழந்த பத்மினி, தனது குடும்பத்தின் பொருளாதார சுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாதவராக கண்ணீர் வடிக்கும் நிலையில் இருக்கிறார்.

இலங்கை முழுவதும் அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. பெண் தலைமைத்துவம் என்பது ஓர் ஆணின் துணையின்றி குடும்பப் பொறுப்பினை குறித்த பெண்  ஏற்று நடாத்துவது ஆகும். பெண் தலைமைத்துவ குடும்பங்களில் கணவனை இழந்தோர், கணவன் காணாமல் போனோர், கணவன் தடுப்புக்காவலில் இருத்தல், விவாகரத்து, கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவன் மாற்றுத்திறனாளியாக இருத்தல் , கணவன் பொறுப்பற்று இருத்தல் (குடி, வேறு பெண்ணுடனான தொடர்பு),  முதிர்கன்னிகள் என்பவர்கள் அடங்குகின்றனர்.  பல்வேறு காரணங்களால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமூகத்தில் உருவாகினாலும், நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெண் தலைமை குடும்பங்களாக்கப்பட்டவர்கள் அதிகளவானோர் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.

வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரை ஆறு பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுகிறது. அதில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின்கீழ் 2140 குடும்பங்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ் 2224 குடும்பங்கள், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவின் கீழ் 1565 குடும்பங்கள், துணுக்காய் பிரதேச செயலக பிரிவின்கீழ் 630 குடும்பங்கள், வெலிஓயா பிரதேச செயலக பிரிவின் கீழ் 663குடும்பங்கள், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் 511குடும்பங்கள் என மொத்தம் 7733 தலைமை தாங்கும் பெண் குடும்பங்கள் வசித்து வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்தகைய பெண்கள் ஏதோ ஒரு சூழலில் தமது குடும்பத்தை சற்றும் எதிர்பார்க்காமல் ஏற்கும் போதே அவர்களுக்கான சவால்கள் சமூகத்தில் உருவாகின்றது. குடும்ப சுமை பொருளாதார சுமையாக மாற்றமடைகின்றது. இதனால் பாதுகாப்பின்மை, வாழ்வாதார பாதிப்பு, உளரீதியான தாக்கம், பிள்ளைகளின் கல்வி பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்,  சமூகத்தினரால் ஓரங்கட்டப்படல், தாழ்வு மனப்பான்மை, நுண்நிதி நிறுவனங்களிடம் அடிமையாதல், தவறான பழக்கவழக்கம், தற்கொலை என பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் பாரிய துன்பங்களுக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.  இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தினை நேரடியாக சென்று ஆய்வுகுட்படுத்தினோம்.

சாப்பாடு செய்து விற்று குடும்ப வருமானத்தை கவனித்துவரும் குடும்ப பெண் கு.தயாழினி

”நான் சாப்பாடு செய்து விற்று அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலமே வாழ்க்கை நடாத்தி வருகின்றேன். எமக்கு சரியான வேலை கிடைப்பதில்லை. நாம் சுயமாக தொழில் செய்யலாம் என நினைத்தாலும் எங்களது மாவட்டத்தினை பொறுத்தவரை சந்தை வாய்ப்பு இல்லை” என புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த கு. தயாழினி கண்ணீர்மல்க தெரிவிக்கின்றார்.

தோட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தால் குடும்பத்தை வழிநடாத்தும் இராசம்மா

‘எமது பிள்ளைகளின் வயிற்று பசிக்காக உணவு, உடை, வாழ்வியல், படிப்பு எனும் தேவைகருதி தொழில் வழங்கும் முதலாளிமாரின் வன்சுரண்டலுக்கு உள்ளாகி, பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றோம். பெண்களுக்கு   வேலைக்கேற்ற கூலியும் கிடைப்பதில்லை.

சுயமுயற்சிக்காக வங்கியில் நுண்கடன்களை வாங்கி அதனை அடைக்க முடியாமல் அதன் மூலம் வரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கமுடியாமல் தற்கொலை தான் முடிவாக பெண் தலைமைத்துவ பெண்கள் கருதும் நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்’ என்று 15 வருடங்களாக குடும்ப பொறுப்பை ஏற்றுநடாத்தும் இராசசேகரம் இராசம்மா கூறியிருந்தார்.

தென்னந்தோட்டத்தில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் வாழ்க்கை நடாத்தி வரும் ந.திலகவதி

‘என்னிடம் இருக்கும் காணிகளை கூட  பிள்ளைகளுக்கு  கொடுக்க முடியாத கட்டத்தில் நான் இருக்கிறேன். அதனை விற்று பிள்ளைகளை படிப்பிக்க முடியாமல் இருக்கின்றது. உரிய நேரத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாத நிலையிலையே இருக்கின்றோம். ஏனெனில் எனது காணி இராணுவத்தின் பிடியில் இருக்கிறது.

எத்தனையோ போராட்டங்கள் நடாத்தியும் எமது காணிகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை… ”  என கவலை வெளியிடும் பெண் தலைமைக் குடும்பத்தின் தலைவி நடனசபேசன் திலகவதி தான் 20 வருடங்களாக குடும்பத்தைப் பொறுப்பேற்று நடாத்தி வருவதாகவும், தென்னந்தோட்டத்தில் வரும் வருமானத்தின் மூலமே வாழ்க்கை நடாத்தி வருகின்றேன் என்றும் கணவன் இல்லாவிட்டால் இச் சமூகம் எங்களை முடக்கி வைக்கவே முயலுகின்றது. நாம் வெளியில் தேவைகளுக்கு போனால் எம்மை கண்டதும் பல பெயர் சொல்லி காயப்படுத்துகின்றார்கள் என்றும் திலகவதி கூறுகிறார்.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வெளியே வர முயற்சித்தாலும் சமூக கட்டமைப்புக்கள் தொடர்ந்து பெண்களை வெளியே வர முடியாத  காரணங்களாக அமைகின்றன.

“பெண்தலைமைத்துவ மாற்றுத்திறனாளி குடும்பங்களிற்கு தொழிற்பேட்டைகளை ஆரம்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது” சதாசிவம் சகீலா

இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவி  சதாசிவம் சகீலா கூறுகையில் ‘முல்லைத்தீவு மாவட்டத்தில் 200 பெண்கள் மாற்றுத்திறனாளிகளை கொண்ட பெண்தலைமைத்துவ குடும்ப  பெண்கள் ஆவர்.

எமக்கென்று ஒரு அமைப்பொன்று இருக்கின்றது.  எமது அமைப்பினால் அவர்களுடைய வாழ்வாதாரம், பிள்ளைகளுக்கான கல்வியை தொடர்வதற்கான உதவிகள், பெண்பிள்ளைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக அறிவூட்டல்களையும் வழங்கியிருக்கின்றோம் என்றும்”  சகீலா குறிப்பிடுகிறார்.

‘தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமே மிகப்பெரிய சவாலாக உள்ளது. கூலி வேலைகளுக்கு வெளியே சென்றால் எதிர்நோக்குகின்ற  பிரச்சினைகள் ஏராளம். அதாவது பாலியல் ரீதியான பிரச்சினைகள், சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற பிரச்சினைகள், பழைய மூடத்தனமான நம்பிக்கைகள் என இப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் தலைமைதாங்கும் குடும்ப பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கிவிடப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு உள ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இதனால் பெண்கள் வேலைக்கு செல்ல விரும்புவதில்லை. இவ்வாறான விடயங்களுக்கு நாங்கள் தீர்வு காண வேண்டுமாக இருந்தால் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு குறிப்பாக பெண்தலைமைத்துவ மாற்றுத்திறனாளி குடும்பங்களிற்கு தொழிற்பேட்டைகளை ஆரம்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது’ என தெரிவித்திருந்தார்.

கிடுகு வியாபாரம் மூலம் குடும்பத்தை வழிநடாத்தும் சுந்தரலிங்கம் கலைச்செல்வி 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 19 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய அமைப்பின் தலைவியும், சமூக செயற்பாட்டாளருமாகிய சுந்தரலிங்கம் கலைச்செல்வி ‘அரச நிறுவனங்களால் ஒரு உதவி வழங்கப்படுகிறது.

அவ் உதவி குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வழங்கப்படுவதாக இருந்தால் பெண் தலைமை தாங்கும் குடும்பம் உண்மையாக அதற்கு தகுதியானவர்கள். ஆனால் அத் தகுதியானவர்கள் உள்வாங்கப்படுவதில்லை.’ என்கிறார். தானும் ஒரு தலைமைதாங்கும் குடும்ப பெண் எனத் தெரிவிக்கும் அவர், தனது சுய தொழில்  கிடுகு வியாபாரம் என்றும் குறிப்பிடுகின்றார்.

அரச திணைக்களங்களுக்கு சென்றால் அவர்களை அவமதிக்கும் தன்மை காணப்படுகின்றது. அவர்களுடைய தேவையை உடனடியாக பூர்த்தி செய்கின்ற நிலைப்பாடு இல்லை.  தற்போதைய காலகட்டத்தில் யாரிடம் பணம் உள்ளதோ? யார் வசதி படைத்தவர்களோ அவர்கள் தான் எந்த திட்டங்களையும், எந்த வேலைகளையும் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

பெண்தலைமைத்துவ குடும்பகளுக்கு தீர்வாக அரச சார்பற்ற நிறுவனங்களோடு கதைத்து பெண்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களை வலுவூட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன்’ என்றும் கலைச்செல்வி தெரிவிக்கிறார்.

தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு அதனூடாக தொழில் வாய்ப்பை வழிகாட்டுதலே  மாற்று திட்டமாக இருக்கும்” சி. உமாபாலன்

வடக்கில் அரச உதவிகளை பெற்றுக்கொள்ள செல்லும் பெண் தலைமைத்துவத்தை சேர்ந்த பெண்களுக்கு  பாலியல் இலஞ்சம் கோருவதாக  உள்ளூர் ஊடகங்களில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே,

பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்கொள்கின்ற பொருளாதார பிரச்சினைகள் குறித்து தொழில் துறை திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட உத்தியோகத்தர் தற்பரசுந்தரம் நிரோஷன் கூறுகையில், ‘பெண்தொழில் முயற்சியாளர்கள் என்பதற்குள்ளே பெண் தலைமைத்துவ குடும்பங்களும் அடங்கும்.

இவர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கு முதலில் இவர்கள் தங்களுடைய பொருட்களை விளம்பரப்படுத்த வேண்டும்.  எங்களால் மாதாந்த சந்தை ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாகவும் ஒழுங்குபடுத்தி கொடுக்கின்றோம். அத்தோடு வருடத்திற்கு ஒரு தடவை, மாகாணத்திற்கான சந்தைகளும் நடைபெறுகின்றது.

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிகளை நாங்கள் வழங்கியிருக்கின்றோம். பலர் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டினாலும் பின்னர் அவர்களுடைய ஆர்வம் குறைந்து வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. “இவர்களுக்கான தீர்வு என்று வரும்போது இவர்களுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பது தான் எங்களால் செய்ய முடியும் என்றார்.”

‘பாடசாலை இடைவிலகல்கள் முல்லைத்தீவை பொறுத்தமட்டில் அதிகம் இடம்பெற்று கொண்டிருக்கிறது. க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதாமலே சராசரி 1000 பேர் இடைவிலகுகிறார்கள். பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வறுமையே காரணம்”  என முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவசுப்ரமணியம் உமாபாலன் தெரிவித்தார்.

“தலைமைதாங்கும் குடும்ப பெண்களுக்கு தீர்வுகளாக எங்களால் பல்வேறுபட்ட பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கின்றன” . சில பிரச்சினைகள் கூடுதலாக முல்லைத்தீவில் தான் இருக்கின்றன. பெண் தலைமைத்துவ குடும்பங்கள் கூடுதலாக இங்கேயே இருக்கிறார்கள். யுத்தத்தினால் வாழ்க்கை துணையை இழந்த குடும்பங்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கான தீர்வுகள் சரியாக என்னும் எட்ட முடியவில்லை. மறுமணம் செய்து கொள்ளலாம். அதற்காக ஆண்களின் வகையை இரண்டாக பார்க்க வேண்டி இருக்கிறது.

திருமணமாகாத ஆண்கள் இவர்களை திருமணம் செய்து கொள்வதா அல்லது திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் இவர்களை திருமணம் செய்து கொள்வதா என்ற சில பிரச்சினைகளும் இருக்கிறது .” எதிர்காலத்தில் கைத்தொழில் துறை சார்ந்த அமைப்புக்கள், தொழிற்சாலைகள் வந்தால் தலைமைத்துவ பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் ஓரளவு பிரச்சினைகள் தீர்க்க கூடியதாக அமையும். இவர்களுக்கு பொருளாதாரத்திற்கான தீர்வாக கைத்தொழில் துறை சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு அதனூடாக தொழில்வாய்ப்பை வழிகாட்டுதலே  மாற்று திட்டமாக இருக்கும்” என கூறியிருந்தார்.

தலைமைதாங்கும் குடும்ப பெண்களில் சிலர் சுய தொழிலில் சாதித்தும் காட்டியுள்ளனர்” ந.தசரதராஜகுமாரன்

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள அதிகாரி ந.தசரதராஜகுமாரன் தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில்  பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வசிக்கின்றனர். நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கைதரத்தை முன்னேற்றுவதை நோக்கமாக கொண்டு செயற்பட்டாலும் “இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் எனும் ரீதியில் பெண்தலைமைத்துவ குடும்பத்தில் சிறுவர்களும் இருப்பதனால் நாம் பெண்தலைமைத்துவ குடும்பங்களை முன்னுரிமைப்படுத்தியே உதவி திட்டங்களை வழங்குகின்றோம்.

ஆனாலும் தலைமைதாங்கும் குடும்ப பெண்களில் பலர் போதிய தொழில் இல்லாமலும், வருமானம், சந்தைவாய்ப்பு இல்லாமல் முடங்கினாலும் சில தலைமைதாங்கும் குடும்ப பெண்கள் சுய தொழிலில் சாதித்தும் காட்டியுள்ளனர்” என்றார்.

“முதன்முறையாக 1300 ரூபா பெறுமதியான சிறு உணவுபொதி ஒன்று கிடைத்தது அதனை கடையில் கொடுத்து அப்பம் சுடுவதற்கான பொருட்களை வாங்கி முகாமில் தொழிலை ஆரம்பித்திருந்தேன். அதே எனது மூலதனமாக இருந்தது….” என்கின்றார்  சாயிராணி.

இறுதி யுத்தத்தில் கணவனை இழந்து  பெண்தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த 17 பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வரும் கிருஷ்ணதாஸ் சாயிராணி முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு தனது குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்ணாவார்

“1300 ரூபா முதலீட்டில் என்னுடைய தொழிலை ஆரம்பித்த நான் தற்போது ஐந்து , ஆறு கோடி பெறுமதியான சொத்தினை சம்பாதித்திருக்கின்றேன். அதிலும் வெளிநாடுகளுக்கு  வல்லாரை அப்பளம், குறிஞ்சா, முருங்கை இலை, அரிசி மா, தூள், நாவல்கோப்பி என ஏற்றுமதி மேற்கொள்கின்றேன். அத்துடன் இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் நானே  வாகனத்தை செலுத்தி சந்தைப்படுத்தலையும் மேற்கொள்கின்றேன் என தனது கதையை தொடர்கிறார்  கிருஷ்ணதாஸ் சாயிராணி. முயற்சி செய்து  முன்னேற்றம் கண்ட பெண்களில் சாயிராணி பெரும் உதாரணமாகும்.

“பெண் பிரதிநிதிகளை ஒவ்வொரு துறைகளுக்கும்  நியமித்தல்  வேண்டும்.  அரச , அரசசார்பற்ற நிறுவனங்களில் முடிவெடுக்கும் இடத்தில் ஆண்களே அதிகளவில் இருக்கின்றார்கள்.’ இதே பெண்கள் இருந்தால் பெண்களுக்கான சலுகைகள், உதவித்திட்டங்கள், உரிமைகள் என்பன சமமாக பகிரப்படும்” என பெண் தலைமை தாங்கும் குடும்ப  அமரா ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கென தனியான தொழிற்பேட்டை நிறுவப்பட்டு, வேலைவாய்ப்பும் வழங்கப்படல் வேண்டும். ஏனெனில் தலைமைத்துவ பெண்களுக்கு பணியிடங்களில் ஏற்படும் பாலியல் ரீதியான சுரண்டல், ஊதிய சுரண்டல் என பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறைவடைவதோடு அவர்களுக்கான பொருளாதாரத்தையும் ஈட்டக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிகரிக்கும். என முல்லைத்தீவு மாற்றுதிறனாளி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பெண் தலைமை தாங்கும் சரியான பயனாளிகளை இனங்கண்டு தலைமைதாங்கும் பெண்களை முன்னுரிமைப்படுத்தி சலுகைகளும், உதவிதிட்டங்களும் வழங்கப்பட வேண்டும் . அவர்களின்  பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்கப்பட வேண்டும்.  பெண்கள் பணியிடங்களில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வேலை செய்யவும் அவர்களுக்கு உரியமுறையில் ஏற்பாடுகள் செய்து  வழங்கப்பட வேண்டும்.

வாழ்வாதார உதவிகள் வழங்கும் போது ,   வழங்கப்படும் வாழ்வாதாரத்தை கொண்டு இலாபத்தினை ஈட்ட முடியுமா என ஆராய்ந்து வழங்கப்படல் வேண்டும் எடுத்துக்காட்டாக வயது முதிர்ந்த பெண்ணுக்கு மாட்டினையும், நடக்க முடியாத மாற்றுதிறனாளி பெண்ணுக்கு கோழியையும் கொடுக்கும்போது குறித்த உதவி தோல்வியடையும். ஏனெனில் வழங்கப்பட்ட வாழ்வாதாரத்தினை அவர்களால் மேற்கொண்டு எடுத்து செல்ல முடியாது.

அதே வயோதிப பெண்ணுக்கு கோழியினையும், மாற்றுதிறனாளி பெண்ணுக்கு அவருக்கு தெரிந்த சுயதொழிலினை வாழ்வாதாரமாக வழங்கும் போது அது வெற்றிபெறும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும்.  இவ்வாறு பொருத்தமான உதவிகள்  பொருத்தமான சூழலில் வழங்கப்படும் போது அவர்களின் இருண்ட  வாழ்வு  ஔிரும் என்பதே நிதர்சனம்.

கட்டுரை – பாலநாதன் சதீசன்

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.