Tuesday, April 30, 2024

Latest Posts

அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – கஜேந்திரன்

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரசியல் கைதி செ.ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனை நேற்று (16) பார்வையிட்ட பின் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் கடந்த 2024.03.26 இல் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு அன்றைய தினமே கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வெலிக்கடையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரது முகநூலில் கடந்த 2020 இல் ஒரு படமும் 2022 இல் ஒருபடமும் பகிரப்பட்டதாகவும் அதன் மூலம் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் முயற்சி என்ற பொய்க் குற்றச்சாட்டினைச் சுமத்தி அவரைத் தடுத்து வைத்துள்ளனர்.

ஏற்கனவே அவர் சுமார் 9 ஆண்டுகள் கொடிய சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கும் பல பொய் வழக்குகளுக்கும் முகம் கொடுத்து விடுதலையாகி தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டு கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார்.

அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாகவுள்ள சுமார் 400 பேர் மாத்திரம் அடைக்கப்படக்கூடிய வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் 2,286 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்.

அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் அவரைச் சந்தித்து உரையாடியிருந்தேன்.

சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கச் சீருடையில் உள்ள படத்தை முகநூலில் பகிர்ந்தாகக் குற்றம் சுமத்தி அதன் மூலம் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தி தன்னை கைது செய்து அடைத்துள்ளளதாகத் தெரிவித்தார்.

மேலும் அடுத்த தடவை எப்போது நீதிமன்றில் முற்படுத்துவார்கள் என்ற திகதிகூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். தன்னைக் கைது செய்து அடைத்துள்ளமையினால் தனது பிள்ளைகள் அநாதரவான நிலையில் இருப்பதாகவும் தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறும் மிகுந்த வேதனையுடன் கோரினார்.

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழர்களது குரல்வளையை நசுக்கி தமிழர்களை தமது கொத்தடிமைகளாக வைத்துக் கொள்வதற்கான எல்லையற்ற அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது. பொலிஸார் இனவாதமாகவே செயற்படுகின்றார்கள்.

மீளுருவாக்கம் என்ற பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஆனந்தவர்ணன் கைது செய்யப்பட்டுள்ளமையை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும். அத்துடன் கொடிய பயங்கரவாதத் தடைச்சட்ட முழுமையாக நீக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம். அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டுமெனவும் கோருகின்றோம் என தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.