தாமரை VS கை! இந்தியாவில் இன்று பாராளுமன்ற தேர்தல்

0
124

உலகின் ஜனநாயக திருவிழாவாக விளங்கும் இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (19) நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்காக தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு இன்று (19) விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்க தத்தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்திய மக்களவைத் தேர்தல் 28 மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசங்களிலும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இன்று 19 ஆம் திகதி முதற்கட்ட தேர்தலும், ஜூன் மாதம் முதலாம் திகதி 7ஆம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது.

வாக்கெண்ணும் பணிகள் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இன்று ஆரம்பிக்கும் முதற்கட்டத் தேர்தல் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களிலுள்ள 102 தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம் , உத்தராகண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலேயே இன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

அத்துடன் புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார், ஜம்மு – காஷ்மீர், இலட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 6 கோடியே 23 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காக தமிழகத்தில் 44,800 வாக்களிப்பு நிலையங்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here