காலம் காலமாய் பகைமையாய் இருந்த இருள்; அவநம்பிக்கையை மட்டுமே தந்த இருள்; அடிமைத்தனத்தையும் சாபத்தையும் தந்த இருள்; சாவு பாவம் தந்த இருள்; கிறிஸ்துவின் உயிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டு- இன்று புனித இரவு தந்து, சாவின் மாந்தர் எம்மை உயிர்ப்பின் சாட்சிகளாய் மாற்றி வாழச் சொல்கிறது ஆண்டவரின் உயிர்ப்பின் ஞாயிறு.
அன்பார்ந்தவர்களே! எம் கிறிஸ்தவ வாழ்வின் விசுவாசத்தின் கொடுமுடியே கிறிஸ்துவின் உயிர்ப்பு தான். தூய பவுல் கூறுவார் கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும் பொருளற்றதாய் இருக்கும் (1கொருந்தியர் 15/14). மரணம் என்னும் வலியும், மர்மமும் இயேசுவின் உயிர்ப்பினால்தான் நம்பிக்கையானது ஒன்றாக மாறியது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கிறிஸ்துவின் உயிர்ப்பு கொண்டு வரும் மாபெரும் செய்தியே அந்த நம்பிக்கை தான். கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவருக்கு இனி இறப்பில்லை என்று கிறிஸ்துவே கூறியதை நற்செய்தியாளர் யோவான் பதிவிடுவதை காண்கின்றோம் (யோவான் 11/ 25 – 25) இனி நாம் சாவின் மாந்தர் அல்ல இனி நாம் உயிர்பின் சாட்சிகள். நாம் உயிர்ப்பின் சாட்சிகளாய் வாழ முதலில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஆழமாக விசுவசிக்க வேண்டும். ஒவ்வொரு ஞாயிறு திருப்பலிகளிலும் நம்பிக்கை அறிக்கையில் மறை நூலில் எழுதியுள்ளவாரே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிக்கை இடுகின்றோம். பலருக்கு இந்த அறிக்கை மனப்பாடம் செய்யப்பட்ட ஜெபமாகத்தான் தோன்றுகின்றது. மாறாக, அந்த சத்திய அறிக்கையின் ஆழத்தை அதில் புதைந்துள்ள விசுவாசத்தை காண தவறிவிடுகிறார்கள். இயேசுவின் உயிர்ப்பை புரிந்து கொள்ள விவிலியம் எமக்கு உதவி செய்கின்றது. அதோடு உயிர்ப்பு சனி வழிபாட்டில் குறிப்பாய் இறை வார்த்தை வழிபாடு கடவுளின் மீட்பு திட்டத்தை பற்றியும் எவ்வாறு தம் ஒரேபேரான மகனாகிய இயேசு கிறிஸ்துவில் அந்த மீட்பு திட்டம் நிறைவேறுகின்றது என்பதை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் கூறியிருக்கின்றன.
விவிலிய ஆதாரங்களை பார்க்குமிடத்து கிறிஸ்துவின் உயிர்ப்பு பற்றி பல குறிப்புகள் உள்ள போதும் கிறிஸ்துவின் உயிர்ப்பை ஒட்டி இந்த நாட்களில் நாம் வாசிக்கும், நமக்கு பரீட்சியமான இறை வார்த்தைகளை உதாரணமாய் காட்டலாம். ஓய்வு நாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருட்கள் வாங்கினர்; அவர் அவர்களிடம் “திகிலுறவேண்டாம்” சிலுவையில் அறையப்பட்ட நசரேத்தூர் இயேசுவை தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ அவரை வைத்த இடம்.” (மாற் 16:1 16: 6) மேலும் மத்தேயு 28 /1-7; லூக்கா 24 /1- 12; யோவான் 20 /1- 12 ஆகிய ஒத்தமை நற்செய்தியாளர் மற்றும் யோவான் நற்செய்தி படி இயேசு இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கு நறுமணப் பொருட்களை கொண்டு சென்ற போது கல்லறையை மூடி இருந்த கல் புரட்டப்பட்டு கல்லறை வெறுமையாய் இருக்க கண்டார்கள் என பதிவு செய்கிறார்கள்.
இங்கு “வெற்று கல்லறை” என்பதே மிகப்பெரிய சாட்சியாக பார்க்கப்படுகின்றது. அதோடு, நற்செய்தியாளரான தூய லூக்கா தன் திருத்தூதுர் பணி நூலில், அதிகாரம் 1 திருவசனம் 3 இயேசுவின் உயிர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இயேசு துன்புற்று இறந்த பின்பு 40 நாட்களாக அவர்களுக்கு தோன்றி, இறையாச்சி பெற்றி கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதை காண்பித்தார்” என பதிவு செய்கிறார்.
ஆம் அன்பார்ந்தவர்களே! கடந்த தவக்கால நாட்களில் அத்தோடு பரிசுத்த வாரத்தில் கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை தியானித்து இன்றைய நாளில் கிறிஸ்துவின் உயிர்ப்பின் நிகழ்வை வாழ்வாக்க அழைக்கப்படுகின்றோம். இனி வரக்கூடிய நாட்களில் கிறிஸ்துவின் உயிர்ப்பு பற்றிய செய்திகளை, நிகழ்வுகளை, சாட்சிகளை இறை வார்த்தைகளில் சிந்திக்க இருக்கின்றோம்.
நாம் ஒன்றை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். அதாவது கடவுள் இந்த உலகின் மீது கொண்ட மாபெரும் அன்பின் நிமித்தமே எமக்கு இயேசு இவ்வளவிற்கு அனுப்பப்பட்டார். தந்தையின் முழுமையான அன்பின் ஒட்டுமொத்த உருவமாக இயேசு எங்களை அன்பு செய்தார். அதன் காரணமாகவே அவர் கொடிய பாடுகளையும் மரணத்தையும் எமக்காக தாங்கிக் கொண்டார். தான் நம்பிய கடவுள் தன்னை கைவிடார் என்பதில் உறுதியாய் இருந்ததனால் உயிருடன் எழுப்பப்பட்டார். நாமும் கிறிஸ்துவை நம்புவோம். நாம் வாழும் இந்த நிரந்தரமற்ற வாழ்வில் நிரந்தரமானவரை, என்றும் மாறாதவரை பற்றிக்கொள்வோம். அவர் கொடுத்த உயிர்ப்பை எம் சாட்சியுள்ள வாழ்வால் ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் பிரசன்னத்தை பிறருக்கு கொடுக்கும் மக்களாய் மாறுவோம். உயிர்த்த இயேசு எங்கும் எப்போதும் நம்முடனே நடக்கின்றார். அவர் பாதம் தொட்டு கிறிஸ்தவ வாழ்வை அர்த்தமுடன் வாழ்ந்து உயிர்த்த கிறிஸ்துவின் சாட்சிகளாய் மாறுவோம். உங்கள் அனைவருக்கும் உயிர்த்த கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்ககளும் ஆசிகளும்.
அருட்பணி S.X ரவிகாந் CMF
பங்குத்தந்தை
தூய மருத மடு அன்னை ஆலயம்,
என்சல்வத்த பங்கு