ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும் இடையிலான அரசியல் சமர் உக்கிரமடைந்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டவலுவற்றவை எனவும், அவை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படும் எனவும் சட்டத்துறை பேராசிரியரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் கட்சி தலைவைர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கடந்த சனிக்கிழமை (22) கட்சி தலைமையகத்தில் கூடியது.
இதன்போது புதிய நிர்வாக சபை தேர்வு இடம்பெற்றது. ஏற்கனவே பதவிகளை வகிப்பவர்கள் அப்பதவிகளில் நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் தான்தான் என டலஸ் அணி பக்கம் உள்ள பீரிஸ் கூறிவரும் நிலையில், புதிய தவிசாளரை மொட்டு கட்சி நியமித்தது.எனினும், இந்த நியமனம் சட்டப்பூர்வமானது அல்ல என பீரிஸ் கூறியுள்ளார்.
” புதிய தவிசாளர் நியமனம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் . ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடந்த சனிக்கிழமை நடத்திய பொதுச்சபைக் கூட்டம் சட்டவிரோதமானது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். கூட்டத்தின் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லுபடியற்றவையாகும். நீதிமன்றம் ஊடாக இதனை நாம் நிரூபிப்போம்.” – எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.
எனினும், பொதுச்சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது என்று மொட்டு கட்சியின் பொதுச்செயலாளர் நேற்று அறிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் இந்த விடயம் உக்கிரமடையுமென அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
N.S