கல்வியை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கைக்கு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
கல்வி பொது உயர்தரப் பரீட்சை முடிவடைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் உயர்தர விடைத்தாள்களை திருத்துவது குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் சாதகமான தீர்வை வழங்கவில்லை எனக் கூறும் இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காத மக்கள் பலம் இல்லாமல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியின் இந்த ஜனநாயக விரோத அறிவித்தலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பிணைக் கைதிகளாக வைத்திருக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களினால் 2023ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக ஏப்ரல் 19 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடர்பாக இந்த வாரத்திற்குள் மாற்று முன்மொழிவுகள் மற்றும் தீர்வுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, பரீட்சை தொடர்பான பணிகளை அத்தியாவசிய சேவையாக பெயரிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
“பரீட்சையை அவசரச் சேவையாகப் பேணுவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த வருடம் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுத்த குழுக்களையே ஈடுபடுத்தி இந்த வருடத்திற்கான உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார்.”
அந்த நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் விடைத்தாள் மதிப்பீட்டுக் கட்டணம் அதிகரிக்கப்படாமையால் ஆசிரியர்கள் போதியளவு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பல்கலைக்கழக போராசிரியர்கள தொழிங்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையால் உயர்த தர விடைத்தாள் மதிப்பிடும் பணியை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
விடைத்தாள் மதிப்பீட்டிற்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அனுமதி பெற்ற போதிலும், ஜனாதிபதியின் கீழ் உள்ள திறைசேரி அந்த அமைச்சரவை பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யாமல், இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், உயர்தர மாணவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ஜனாதிபதி, கல்வியை அத்தியாவசிய சேவையாக கருதி ஜனநாயக விரோத கருத்துக்களை வெளியிடுவது மிகவும் வருந்தத்தக்கது என ஆசிரியர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயர்தரப் பரீட்சையின் தரத்தைப் பேணுவதற்கு, பல்கலைக்கழகப் பேராசிரியர்களை கண்காணிப்பாளர்களாகக் கொண்டிருத்தல் அவசியமான வேளையில் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்காமல் அவர்கள் இன்றியே விடைத்தாள் மதிப்பீடு மேற்கொள்ளப்படுமாயின் அது பாரதூரமான பிரச்சினையாக அமையுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கல்வியை அத்தியாவசிய சேவையாக அறிவித்தால் அதற்கு எதிராக ஆசிரியர் அதிபர்கள் அணி திரளும் என ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“பாடப்புத்தகங்களை முழுமையாக வழங்குவதற்கும், சீருடைத் துணிகளை முழுமையாக வழங்குவதற்கும், கல்வி அமைப்பில் சுமார் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் மற்றும் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு கல்வியின் இன்றியமையாத பணிகளை நிறைவு செய்யாத சூழ்நிலையில், கல்வியை அத்தியாவசிய சேவையாக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டை ஜனாதிபதி மேற்கொண்டால், அதற்கு எதிராக இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்ப்பினை வெளியிடுவார்கள் என தெரிவித்துள்ளோம்.”
அரசாங்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதுடன் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு போதிய கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.
N.S