Sunday, June 16, 2024

Latest Posts

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பீரிஸின் கருத்தை வரவேற்கும் முன்னாள் வடமாகாகண கல்வி அமைச்சர்!

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல். பீரிஸ் தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் வடமாகாகண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு ‘சர்வதேச ஒத்துழைப்பும் கண்காணிப்பும் அவசியம்’ என்ற பீரிஸின் கருத்தை மகிழ்வுடன் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை(29) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்;

ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் மூன்று தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலும் நடைபெற்றது. இதில் முந்நூறுபேர் வரை உயிரிழந்தனர். ஐந்நூறுபேர் வரை படுகாயமடைந்தனர். இது கடந்த ஐந்தாண்டுகளாக கொழும்பு அரசியல் தளத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதுவரை விசாரணை அறிக்கை வெளிவரவில்லை. இந்த விடயம் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் மூன்று நாட்கள் விவாதமும் நடைபெற்றுள்ளது. மூன்றாம் நாள் (27.04.2024) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தாங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்களுக்கோ நாட்டின் ஏனைய மக்களுக்கோ நம்பிக்கை கிடையாது.

விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பும் சர்வதேச தரப்பின் கண்காணிப்பும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.சர்வதேச ஒத்துழைப்புடன்விசாரணைக்கான சிறப்பு பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும். விசாரணை பூரணமாக அமைய வேண்டும்.

சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது ஒன்றும் புதிதல்ல. முன்னர் உதலாகம ஆணைக்குழு விசாரணைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது.

1948ஆம் ஆண்டு 14ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சிறப்பு பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். என்ற மிக முக்கியமான கருத்துகளைதெரிவித்துள்ளீர்கள். நீதியை நிலைநாட்ட தாங்கள் துணிச்சலுடன் தெரிவித்த இக்கருத்துகளுக்கு தமிழினம் தலைவணங்குகிறது. உலகப் பிரசித்திபெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றவர் நீங்கள். பலநூறு மாணவர்களுக்கு சட்டம் கற்பித்தவர் நீங்கள்.

சட்டத்தின் மூல தத்துவங்களில் முக்கியமானது சட்டம் அனைவருக்கும் சமம் மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுடன் தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்பதையும் நாம் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
முந்நூறுபேர் கொல்லப்பட்டு ஐந்நூறுபேர் படுகாயமடைந்த தாக்குதலுக்கு நீதி கோரி தாங்கள் தெரிவித்த மேற்படி கருத்துகளின் மூலம் இந்த நாட்டில் உள்ளக விசாரணைகள்மீது மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.

சர்வதேச கண்காணிப்பின்கீழ் சர்வதேச ஒத்துழைப்புடனான விசாரணை அவசியம் என்பதை தாங்கள் அடித்துச் சொல்லியிருப்பதிலிருந்து பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட இலங்கையர் எவருமற்ற நடுநிலையான சர்வதேச விசாரணைக்குழு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்து யுத்தத்தில் சம்பந்தப்படாத நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும்

மேலும் பல்லாயிரம்பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் வெளிப்படுத்திய அறிக்கையையும் அதுபற்றிய பூரண விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தையும் அதன் பிரகாரம் சர்வதேச நீதிபதிகள், வழக்குரைஞர்கள், வழக்குத் தொடுநர்கள் ஆகியோரை இணைத்து போர்க்குற்றம் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும்

தாங்கள் இவை இலங்கையின் இறையாண்மையை மீறும் செயல் என்றும் இலங்கையில் சிறந்த நீதித்துறை உண்டு. உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நாம் எமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோம் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வரம்புமீறி செயற்படுகிறது என்றும் மூர்க்கமாக எதிர்த்த நீங்கள் இன்று மனம் திருந்தி அத்தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்று நாம் நம்புகின்றோம்.

எனவே உயிர்த்த ஞாயிறன்று பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க தாங்கள் கூறிய அதே அடிப்படையில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் மக்களுக்கும் நீதி வழங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கலப்புப் பொறிமுறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவதன் மூலம் பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாலும் பல்லாயிரம்பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாலும் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்க நாடாளுமன்றத்தில் பேசி வழியேற்படுத்துவீர்கள் என நம்புகின்றோம். தமிழினத்திற்கு நீதிகோரும் தங்களது நாடாளுமன்ற உரையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் என்றார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.