சமகி ஜன பலவேகவின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நிறுத்துமாறு சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் தடை உத்தரவை நீக்க கோரி தாக்கல் செய்த மனுவை பரிசீலிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் 21 ஆம் திகதியை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரால் இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த மனுவை இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரக்கோன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது மனுவை இம்மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரை இணைத்துக்கொள்வது தொடர்பில் தாம் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் தம்மை கட்சி உறுப்புரிமை மற்றும் கட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு சமகி ஜன பலவேகவின் தலைவர்கள் தயாராகி வருவதாக சரத் பொன்சேகா கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, சரத் பொன்சேகா சமகி ஜன பலவேகவில் அவர் வகிக்கும் பதவிகளையும் அவரது கட்சி உறுப்புரிமையையும் இழப்பதைத் தடுத்து உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன் பின்னர், தடை உத்தரவை கலைக்குமாறு சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் விடுத்த கோரிக்கையும் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
அதன் பின்னர், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும், அதற்கமைவாக, சரத் பொன்சேகா பெற்றுள்ள தடை உத்தரவுகளை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, சமகி ஜன பலவேக தலைவர்கள் இந்த சீராய்வு மனுவை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.