நேற்று (15) பிற்பகல் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை கொலை செய்யப் போவதாக ராஜாங்க அமைச்சர் அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் தேர்தலில் அமைச்சரை நிற்க விடமாட்டோம் என்றும், தங்களிடம் ஆயுதம் இருப்பதாகவும், இந்த அச்சுறுத்தலை உதாசீனப்படுத்தினால் எரித்துக்கொலை செய்வோம் என்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மிரட்டியதாக கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அச்சுறுத்தல் விடுத்த நபரின் தொலைபேசி இலக்கத்தின் விபரங்களை அறிய பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெறவுள்ளதாகவும், இது பழைய கொலைக் கலாசாரத்தின் புதிய ஆரம்பமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
தனது அரசியல் பயணத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டத்தின் பெயரால் தனது வீடுகள் எரிக்கப்பட்ட போதும் தனது அரசியல் கொள்கைக்காக அஞ்சாமல் நின்ற தனது அரசியல் பயணத்தை இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகளினால் மாற்ற முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.