Friday, May 3, 2024

Latest Posts

சமுர்த்தி உதவி திட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிப்பா?

” சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உதவி திட்டங்களில் இருந்து மலையக பெருந்தோட்ட மக்களின் பெயர்கள் வெட்டப்படுவதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது உண்மை கிடையாது. இம்முறை உரிய வகையிலேயே பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உதவி திட்டங்களை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது கிடைக்கும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

” சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு நிதி உதவிகளின் போது மலையக சமூகம் ஓரங்கப்பட்டுகின்றது. அவர்களின் பெயர்கள் வெட்டப்படுகின்றன என்ற பிரச்சாரத்தை எதிரணிகள் சில முன்னெடுத்து, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுத்துகின்றன.

முன்னர் இந்த குறைபாடு இருந்திருக்கலாம். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை உள்ளது, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன கிடைக்கின்றன எனக்கூறி கிராம அதிகாரிகளால் அவர்கள் ஒதுக்கப்பட்டிருக்கலாம். அப்போதும் நாம் தற்காலிக தீர்வுகளை பெற்றுக்கொடுத்தோம்.

இம்முறை அதிகாரிகள் நேரில் சென்று தகவல்களை திரட்டினர். எவருக்கும் பாகுபாடு காட்டப்படமாட்டாது. உதவிக் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது நிச்சயம் கிடைக்கும். இது தொடர்பில் நிதி இராஜங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் நாம் பேச்சு நடத்தினோம். நாடாளுமன்ற உரையின்போது பெருந்தோட்ட மக்கள் பற்றி அவர் தெளிவாக குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

15 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையக தமிழர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர்வரை பெருந்தோட்டங்களில் தொழில் புரிகின்றனர். இவர்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களை முறையாக அடையாளம் காண வேண்டும். மாறாக முழு சமூகத்தையும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமூகமாக அடையாளப்படுத்த முற்படுவது, அந்த சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும். ஆகவே, முறையான வகையிலேயே பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரில், 85 ஆயிரம் பேர் வரை பெருந்தோட்டப்பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இது 52 வீதமாகும். பட்டியலில் குறைப்பாடுகள் உள்ளனவா என்பது பற்றி ஆராய்ந்து, அவற்றை நிவர்த்தி செய்யும் பணியிலும் ஈடுபடுகின்றோம். எனவே, மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

டிசம்பர் மாதம் ஆகும்போது பணவீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துவிடும். நாடு வழமைக்கு திரும்பிவருகின்றது. இதனால்தான் மக்கள் மத்தியில் எதிரணிகள் வதந்திபரப்பி வருகின்றன.

அதேவேளை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை பதவி நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களிக்கும். இது விடயத்தில் நாம் அமைச்சர் பக்கமே நிற்போம். நாட்டில் தற்போது தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படுகின்றது. மின் கட்டணத்தை குறைப்பது பற்றியும் பரீசிலிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் சுயாதீன ஆணைக்குழுவொன்றின் தலைவர் அரசின் திட்டங்களை குழப்பும் வகையில் செயற்படக்கூடாது. அவர் அரசியலை இலக்கு வைத்து செயற்படுகின்றார். எதிரணிகளும் அவரை பகடையாக பயன்படுத்தி அரசியல் நடத்தி வருகின்றன. இப்படியானவரை பதவி நீக்கும் யோசனையை நாம் ஆதரிப்போம். ” – என்றார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.