Saturday, April 27, 2024

Latest Posts

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் யூன் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் செல்லாமல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இலத்திரனியல் கடவுச்சீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

ஒன்லைன் வீசா விண்ணப்பத்தில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த நோக்கத்திற்காக, வெளிநாட்டவர்கள் சிரமமின்றி விசாவைப் பெறுவதற்குத் தேவையான பொறிமுறையை விரைவாகத் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும், இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதிக வருமானம் ஈட்டும் வகையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க வேண்டியதன் தேவை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கு அவசியமான நடவடிக்கைகளை காலதாமதம் இன்றி மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா, எஸ்.எம்.எம்.முஷாரப், சாகர காரியவசம், யதாமினி குணவர்த்தன, (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குழுவின் தலைவரின் அனுமதியுடனும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அதுமாத்திரமன்றி, வெளிவிவகார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் கம்பனி போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.