Thursday, April 25, 2024

Latest Posts

ATA நிறைவேற்றப்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சிக்கல்

அரசாங்கத்தினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் தாய்மார்களுக்கும் பாதகமாக அமையும் என போரினால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பயங்கரவாத தடைச் சட்டத்தை இயற்றுவது என்பது, ஜனநாயக போராட்டத்தை செய்து வருகின்ற எமக்கு பாதகமாக அமையும் என்பதாலும், நாம் எமது உரிமைகளை கேட்க முடியாது என்பதாலும் இந்த புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் இந்த நாடாளுமன்றத்திலே இதனை நிறைவேற்றக்கூடாது என்பதையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.”

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகச் சொன்ன அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (ATA) உருவாக்க முயற்சிப்பதாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டாகவோ அல்லது தனியாகவோ போராடுபவர்களுக்கு இந்த சட்டம் தடையாக அமையுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் ஆர்வமுள்ள தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து அதனை மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ச கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இலங்கையின் மிக நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் அரசாங்கம் ஆலோசனை நடத்தியதாக தெரியவில்லை.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் மூலம் தொழிற்சங்க உரிமைகள், ஊடக உரிமைகள், போராட்டங்கள் நசுக்கப்படும் என சிலர் கூறி மக்களை தவறாக வழிநடத்துவதாக,  கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், புதிய சட்டமூலத்தை விமர்சிப்பவர்கள் திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சுமத்தினார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி 2,291ஆவது நாளான நேற்று முன்தினம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தாய்மார்கள், போர்க்குற்ற விசாரணைக்கான உள்நாட்டு பொறிமுறையை நிராகரிப்பதாகவும், சர்வதேச விசாரணையையே கோருவதாகவும் மீண்டும் வலியுறுத்தினர்.

“பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலத்தை உடனடியாக நிறுத்து! புதிய சட்டங்களை திணித்து மக்களின் குரலை நசுக்காதே! போன்ற கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் பாதுகாப்புப் படையினர் பொறுப்பேற்ற பின்னர், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு கோரி,  2017ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டங்கள் தற்போது 2,300 நாட்களை நெருங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.