Saturday, November 23, 2024

Latest Posts

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் எம்பியை பெறுவது எமது உரிமை!

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை  பெற்றே தீருவோம். ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் எம்பி பதவியை பெறுவது எமது உரிமை. அது ஒரு சலுகை அல்ல. ஆகவே அடுத்த முறை எங்கள் வேட்பாளர் சந்திர குமார் இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பியாக வெற்றி பெற்று வருவார்.

இப்படி எமது கடும் உழைப்பினால் தமிழ் பிரதிநிதித்துவங்களை நமது இனம் பெறுகின்ற சூழல் கூடி வரும் போது, நாய், நரி, பூனை, யானை, காகம், குருவி, கோழி சின்னங்களை தூக்கி கொண்டு வந்து தமிழ் வாக்குகளை சிதறடிக்க இப்போதே சிலர் திட்டம் போடுகிறார்கள். துரோகிகளான இவர்கள் தலைகளில் இடிதான் விழ வேண்டும்.

நாய், நரி, பூனை, காகம், குருவி வந்தால் விரட்டி விடுங்கள். கோழி கிடைத்தால் பிடித்து புரியாணி போடுங்கள். இந்த மழை, வெள்ளத்துக்கு இடையிலும், இங்கே பெருந்தொகையில் கூடி இருக்கும் நீங்கள் இம்மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளில், அனைத்து தோட்ட பிரிவுகளில், அனைத்து நகர பிரிவுகளில் அமைந்துள்ள எங்கள் அமைப்பாளர்களின் தலைமையிலான கட்சி வலை பின்னல் செயற்குழு உறுப்பினர்கள். உங்கள் பெயர் பட்டியல் என்னிடம் இருக்கிறது. இது ஜனநாயக மக்கள் முன்னணியின் மாவட்டம் தழுவிய கட்டமைப்பு மாநாடு. இதுதான் எங்கள் அறிவார்ந்த  அரசியல் பாணி என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட கட்டமைப்பு மாநாடு, மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஏற்பாட்டில், இரத்தினபுரி நகரசபை மண்டபத்தில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடை பெற்றது.

இதில் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்பி ஹர்ஷா டி சில்வா, இரத்தினபுரி மாவட்ட எம்பிகள் தலதா அதுகோரள,  ஹேஷா விதாரண, வருண கமகே, ஜமமு பிரதி தலைவர் வேலு குமார் எம்பி, மலையக மக்கள் முன்னணி பிரதி தலைவர் இராஜாராம் ஆகியோர் உட்பட கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களும், விசேட அழைப்பாளர்கள், அங்கத்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் தலைமை உரை ஆற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

இது மாவட்டம் தழுவிய கட்டமைப்பு மாநாடு. வண்டிகளில் ஆளைக்கூட்டி வந்து தலைகளை எண்ணிக்காட்டும் நிகழ்வு அல்ல. கடந்த ஞாயிறன்று தம்பி பரணிதரன் கேகாலை மாவட்டத்தில் நடத்திய அம்மாவட்ட கட்டமைப்பு மாநாடு போன்று, இன்று தம்பி சந்திர குமார் இங்கே இரத்தினபுரி மாவட்டத்தில் நடத்துகிறார். நான் சப்ரகமுவ மாகாணத்தில் பிறந்தேன். சப்ரகமுவ மாகாணத்து, பக்கத்துக்கு கேகாலை மாவட்டத்தில் என் தாயின் ஊர் எட்டியாந்தோட்டை களனி கங்கை நதி தீரத்தில் பிறந்தேன். பின்னர் என் தந்தையின் ஊர் கண்டிக்கு போய் மாகாவலி கங்கை தீரத்தில் வளர்ந்தேன். பின்னர் இரண்டு நதிகளும் சேரும் கடலை கொண்ட கொழும்பை கைப்பற்றினேன். உங்கள் சார்பாகவும் உங்கள் ஆளாகவும், அங்கே நான் தலைநகர எம்பியாக இருக்கிறேன் என்பதை மறந்து விட வேண்டாம்.

எனது எம்பிக்கள் அவ்வந்த மாவட்டங்களில் வாழும் மண்ணின் மைந்தர்களாக இருக்க வேண்டும். தமிழ் மொழியுடன் சிங்களமும் பேச வேண்டும். எமது துன்பம், துயரம், கஷ்டம், கண்ணீர் ஆகியவற்றை சிங்கள மொழியில் நாட்டுக்கு கேட்கும் விதமாக அவர்கள் உரக்க கூற வேண்டும். நான் அதைதானே செய்கிறேன்? அப்படிதான் எங்கள் எம்பிக்கள் இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. அதைதான் வேலுகுமார் செய்கிறார்.

எங்கள் மாவட்ட அமைப்பாளர்கள் இரத்தினபுரி சந்திர குமார், கேகாலை பரணிதரன், கம்பஹா சசி குமார், கொழும்பு பாலசுரேஷ், களுத்துறை அன்டன் ஜெயசீலன் ஆகியோர் செய்வார்கள். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரேலியாவில், வடக்கில், கிழக்கில் பிரச்சினை இல்லை. ஆனால், நாம் சிறுபான்மையாக வாழும் கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நிலைமை சவால் மிக்கது.

இம்மாவட்டங்களில் எமது கடும் முயற்சியால் தமிழ் பிரதிநிதித்துவங்களை எமது இனம் பெறுகின்ற சூழல் கூடி வரும் போது, நாய், நரி, பூனை, யானை, காகம், குருவி, கோழி சின்னங்களை தூக்கி கொண்டு வந்து தமிழ் வாக்குகளை சிதறடிக்க இப்போதே சிலர் திட்டம் போடுகிறார்கள். துரோகிகளான இவர்கள் தலைகளில் இடி விழ வேண்டும். நாய், நரி, பூனை, யானை, காகம், குருவி வந்தால் விரட்டி விடுங்கள். கோழி கிடைத்தால் பிடித்து புரியாணி போடுங்கள்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.