நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கண்டி மாவட்ட அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சம்பவத்தை சமரசம் செய்த போதிலும், கூட்டம் முடிவடைந்து வெளியேறிய போது குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் மீண்டும் மாடிப்படியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, மகிந்தானந்த அளுத்கமகே தள்ளுமுள்ளு செல்லும்போது, மாடிப்படியில் இருந்து குணதிலக்க ராஜபக்ஷ எம்.பி.கீழே விழுந்ததில் காயமடைந்து இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, தனக்கும், குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும், ஆனால், அவரையும், சம்பவத்தில் தலையிட்ட ஜகத் சமரவிக்ரமவையும் தள்ள முயற்சிக்கவில்லை எனவும் குணதிலக ராஜபக்ஷவை அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்ல முற்பட்ட போது கீழே விழுந்தார் எனவும் தெரிவித்தார்.