Saturday, July 27, 2024

Latest Posts

வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்-காதர் மஸ்தான்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் பின்னடைவைச் சந்தித்த பொருளாதாரம் தற்போது ஸ்திரமாகி வருவதாகவும், அதனூடாக மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மேம்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,

“இன்று மக்கள் ஓரளவுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், எமது பகுதிகளில் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் அரசாங்கத்தின் பாரிய வேலைத் திட்டங்கள் நடந்து வருகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வீழ்ச்சியடைந்திருந்த இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியுள்ளார். இதனால் பொருளாதார ரீதியில் நலிவடைந்த மக்களின் வாழ்வு சீராகி வருகிறது. அத்துடன், மக்களுக்கு காணி உரிமைகளையும் ஜனாதிபதி வழங்கி வருகிறார். 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் “ உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கு நேரடியாக வந்து, அந்த மக்களுக்கான முழு உரிமையுடைய காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 18000 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் சுமார் 10,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் சுமார் 12,000 பேருக்கும் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. காணிகளை துரிதமாக வழங்கும் பணிகளில் ஆளணிப் பற்றாக்குறை இருப்பதாக நாம் ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவிடம் கூறியிருந்தோம். அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

மேலும், கைவிடப்பட்டுள்ள குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் சேதமடைந்துள்ள வீதிகளைப் புனமைக்கும் பணிகளும் எமது அமைச்சின் ஊடாக நடைபெற்று வருகின்றது. அதேபோன்று வாழ்வாதாரத்திற்கான ஆடுகள், தானியப் பயிர்ச்செய்கைக்கான விதைகள் போன்றவற்றை வழங்கும் வேலைத்திட்டமும் நடைபெற்று வருகின்றது. வெளிநாட்டு நிதிஉதவியுடன் கூடிய அபிவிருத்திப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. பொருளாதார நெருக்கடியின்போது இடைநடுவே கைவிடப்பட்ட சுமார் 15 கிலோமீற்றர் வீதியின் அபிவிருத்திப் பணியும் நடைபெற்று வருகிறது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக அங்கு உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான நிதிகளை ஒதுக்கி அனைவரையும் ஒன்றிணைத்து இப்பணிகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார்.

மேலும், யுத்த காலப்பகுதியில் அடர்ந்த காடுகளாக அன்றி, வனப்பகுதியாக அடையாளமிடப்பட்ட, மக்கள் வாழ்ந்து வந்த காணிகளின் விடுவிப்பு பணிகளும் தற்போது படிப்படியாக நடைபெற்று வருகின்றது. தற்போது நாட்டின் பெரும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேபோன்று எமது பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் குறித்தும் ஜனாதிபதியின் வடமகாண விஜயத்தின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக புத்தளம் இழவங்குளத்தின் ஊடாக செல்லும் மரிச்சுக்கட்டி – மன்னார் யாழ்ப்பாண வீதியை திறக்க வேண்டிய தேவையும் இருப்பதாக நாம் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கின்றோம்” என்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.