முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர், வெளிநாட்டு இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்னும் நீதி கிடைக்காத நிராயுதபாணியான தமிழர்களின் குழுவொன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.
வடபகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய அமைதி காக்கும் படைகள் இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் (ஜுன் 6) யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் இந்த நினைவேந்தலை நடத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் நினைவாக உறவினர்கள் அவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் இந்த நினைவேந்தலில் இணைந்துகொண்டிருந்தார்.
வாதரவத்தையை சேர்ந்த தம்பிராசா லட்சணகுமார், தளையசிங்கம் தயானந்தராசா, சுந்தரராசா வைகுந்தராசா, வல்லிபுரம் துரைராஜசிங்கம், வல்லிபுரம் பாலசிங்கம், தம்பிமுத்து யோகேந்திரம், புத்தூரைச் சேர்ந்த தவசி நல்லதம்பி (நல்லான்), சின்னவன் சிவபாதம், சடையன் கந்தையா ஆகிய 9 பேரையும் இந்திய அமைதி காக்கும் படையினர் புத்தூர் கிழக்கு ஞானதேவி கோயிலுக்கு அழைத்துச் சென்று கொன்று எரித்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில், 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்த வந்து, வடக்கை ஆக்கிரமித்திருந்த இந்திய அமைதிகாக்கும் படையினரால், தொடர்ச்சியான பாரிய படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் இந்தியப் படையினர் கொல்லப்பட்டதை அடுத்து இந்திய இராணுவம் தொடர் படுகொலைகளில் ஈடுபட்டது.
தற்போதைய ஜனாதிபதி அந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்ததோடு, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை அப்போது பிரதமராகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் பதிவி வகித்தார்.
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக இந்தப் படுகொலைகள் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் இந்து சமுத்திரத்தின் இருபுறத்திலும் இருக்கும் எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைய அதிகாரப் பகிர்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளையும் வகித்த, எதிர்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி, ,”குரங்கு இராணுவம்” என ஏளனம் செய்யப்பட்ட இந்தியப் படைகள் வடக்கில் நிகழ்த்திய குற்றங்களுக்கு நீதியை நிலைநாட்ட எதுவும் செய்யவில்லை.