Wednesday, November 27, 2024

Latest Posts

அன்று 13 ஐ அமுலாக விடாமல் தவறிழைத்தது தமிழர் தரப்பே – டக்ளஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

“அன்றைக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதை நடைமுறைப்படுத்த விடாமல் உண்மையாகவே தவறிழைத்தது இலங்கையோ, இந்திய அரசோ அல்லது சர்வதேசமோ அல்ல. அதில் தமிழர் தரப்புத்தான் முழுமையாக தவறிழைத்துக் கோட்டைவிட்டது. இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தோடு தென்னிலங்கை ஆட்சியாளர்களின் குணாதிசய ரீதியான மாற்றங்கள் அன்று ஏற்பட்டிருந்தன. ஆனால், அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தத் தவறிவிட்டோம். எங்களுக்கு வினை விதைத்தது நாமே தானே, வேறு யாரும் அல்ல.”

– இவ்வாறு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாப்பாணத்திலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (15) நடத்திய ஊடக சந்திப்பின்போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் வடக்கு மாகாணத்துக்கு வந்து சென்றிருக்கின்றனர். அவர்கள் வந்து என்ன பேசியிருக்கின்றனர் என்பதும், ஏனைய தமிழ்க் கட்சியினர் என்ன கேட்டிருக்கின்றனர் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

குறிப்பாக இங்குள்ள தமிழ்க் கட்சியினர் அவர்களிடத்தே 13 ஆவது திருத்தத்தில் காவாசி தாறியா, அரைவாசி தாறியா, முக்கால்வாசி தாறியா என்று கேட்டிருக்கின்றனர். ஆனால், நாங்கள் அப்படிக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

உண்மையில் தமிழ் மக்களின் போராட்டங்கள், தியாகங்களாலேயே இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஊடகாகவே இந்த 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அந்தத் திருத்தம் நமக்குக் கிடைக்கின்றபோது காவாசி, அரைவாசி, முக்கால்வாசி என்றெல்லாம் இருக்கவில்லலை. அது முழுமையாகத்தான் இருந்தது.

அதனை நடைமுறைப்படுத்துகின்ற காலத்தில் இந்தியா தனது படைகளையும் அனுப்பியிருந்தது. இவ்வாறு ஒரு பக்கம் தன்னுடைய படைகளை அனுப்பிய அதேநேரத்தில் இராஜதந்திர ரீதியாகவும் நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்திருந்தது.

ஆனால், துரதிஷ்டவசமாக பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பாதவர்கள் 13 ஆவது திருத்தத்தில் ஒன்றுமில்லை என்று அன்றைக்குக் கூறிவிட்டார்கள். அது மாத்திரமல்லாமல் 13 ஆவது திருத்தத்தைத் தும்புத் தடியால் கூட தொடமாட்டோம் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள். அன்று அவ்வாறு கூறியவர்கள் இன்று என்ன கேட்கின்றனர் என்று பாருங்கள்.

இங்கு ஒரு விடயத்தை நான் கூறி வைக்க வேண்டும். அதாவது  நீண்ட காலத்துக்குப் பின்னர் என்னுடைய நண்பர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் நானும் ஒரு நிகழ்வில் அருகருகே அமர்ந்திருந்து உரையாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது.

அப்போது அன்றைக்கே இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நாம் ஏற்று இருக்கலாம் என்றும், நாங்கள் எங்கேயோ சென்று இருக்கலாம் என்றும் கூறியிருந்தேன். அதற்கு அவருடைய பதில் என்னுடைய கருத்தை அவர் ஏற்றுக்கொள்வதாகவே இருந்தது.

உண்மையில் இதனையே அவர் மனசுக்குள்ளே அப்படி நினைத்துக் கொண்டிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். அதனைச் செய்ய வேண்டிய நேரத்தில் அனைவருமாகச் செய்யாமல் நாங்கள் எல்லாம் கோட்டை விட்டுவிட்டோம் என்பது எங்களுக்கு அசிங்கம் அல்லது அவமானம் என்றுதான் நினைக்கின்றேன்.

தென்னிலங்கை அரசாக இருக்கலாம், இந்திய அரசாக இருக்கலாம் அல்லது சர்வதேச சமூகமாக இருக்கலாம், இந்த மூன்று தரப்பினரும் தங்களின் நலன்களிலேயே அக்கறையாக இருப்பார்கள், எங்கள் நலனில் அக்கறையாக இருக்கமாட்டார்கள்.

இன்று பாலஸ்தீனத்திலும் காஸாவிலும் சர்வேச சமூகம் என்ன செய்து கொண்டிருக்கின்றது. அந்தப் போரில் அழிவு முற்றுப்பெறும் வரை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதுதான் நமக்கும் நடந்து முடிந்திருக்கின்றது. எனவே, இவர்களை நம்பிக் கொண்டிப்பதை விடுத்து நாம் எமது பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்று சிந்தித்து அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியம்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.