வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் தொகை மோசடி கும்பலொன்றின் கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
“இதுகுறித்து நீதிமன்றத்திற்கும் நாம் தகவல்களை வழங்கியுள்ளோம். அதேபோல், கணினி குற்றங்கள் தொடர்பான எங்களின் அனைத்து பிரிவுகளும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றன. ஒன்று, இதற்கு தொடர்புடையவர்கள் யார்? எங்கள் அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? இரண்டு, இது எவ்வாறு நடந்தது? மூன்று, இழந்த பணத்தை எவ்வாறு மீட்டெடுப்பது? என்பன குறித்து ஆராயப்படுகிறது. மத்திய வங்கி மற்றும் இதனுடன் தொடர்புடைய பிற நிறுவனங்கள் இரு தரப்பிலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன,” என்று அவர் கூறினார்.
அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இந்தக் கருத்துக்களை நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வெளியிட்டார்.
இந்த நிதி மோசடி 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சம்பவம் நடந்ததிலிருந்து பல மாதங்கள் கடந்துள்ள போதிலும், பணம் எந்தக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
