Wednesday, June 26, 2024

Latest Posts

காணாமல் போனமை குறித்து STF-ற்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்க்கு கொலை அச்சுறுத்தல்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாட்டின் தலைமை சட்ட அதிகாரியிடம் முறைப்பாடு செய்த மறு தினமே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் கடத்தப்பட்டு 25 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட நபர் தொடர்பில் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்த தாய்க்கு ‘குடும்பத்தை அழிப்போம்’ என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் குற்றமாக அறிவிக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக, காணாமல் போனமை தொடர்பில், சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்வதில் முன்னின்ற கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு குறித்த தாயின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவிக்கின்றது.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி இரவு உணவிற்காக பாண் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக கடைக்குச் சென்ற கபில குமார என்ற நபர் காணாமல்போன நிலையில், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது புதல்வர், 25 நாட்களுக்குப் பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஏப்ரல் 21ஆம் திகதி இரவு பிடிகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவரது தாயார் குமுதுனி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

“அவரைக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவரது தலைவிதி அல்லது அவர் கொண்டு சென்ற நபர்களின் அடையாளம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மையும் அச்சமும் 2024 ஏப்ரல் 20 அன்று தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் உள்ள பிடிகல பொலிஸ் நிலையத்தில் எதிர்பாராதவிதமாக கபில குமார கண்டுபிடிக்கப்படும் வரை தொடர்ந்தது,” என சட்டமா அதிபரிடம் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபில குமார கடத்தப்பட்டு இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது ஆயுதம் தாங்கிய குழுவொன்று சித்திரவதை செய்து கொலை செய்ய முயற்சித்ததாக சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள 20 பக்க முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்த ஒருவர், ‘சேர் இவனை எடுத்தது யாருக்கும் தெரியாது… இப்படியே அடிப்போம். நாங்கள் இவனை கொண்டு வந்ததை யாரும் பார்க்கவில்லை’ எனத் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழு மற்றும் தாய் குமுதுனி ஜயசேகர ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்த வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுகின்றமைக்கு எதிராக, 2018ஆம் ஆண்டு ஜுன் 13ஆம் திகதி பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் (CPRP) கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு (CPRP) சட்டமா அதிபரிடம் இந்த முறைப்பாட்டை செய்திருந்தது.

சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட மறுதினம்  ஜூன் 14 வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத நபர், “வழக்கு போடுவதால் நாங்கள் அஞ்சமாட்டோம். உங்களை குடும்பத்தோடு அழித்து விடுவோம்” என கபில குமாரவின் தாயாரை அச்சுறுத்தியுள்ளதாக கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழு தெரிவிக்கின்றது.

அதன் பின்னர், ஜூன் 15ஆம் திகதி அஹங்கம பொலிஸில் CIB 5 285/109 என்ற முறைப்பாட்டு இலக்கத்தின் கீழ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அன்றைய தினமே, கைதிகளின் உரிமைகளை  பாதுகாக்கும் குழுவின் நிர்வாக பணிப்பாளர், சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் அமைப்பின் தலைவர் சுதேஷ் நந்திமால் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0775379878 என்ற தொலைபேசி இலக்கத்தில் இருந்து இந்த உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

கபில குமாரவின் தாயார் தனக்கு ஏற்பட்ட இந்த உயிர் அச்சுறுத்தல் குறித்து அஹங்கம பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற போது, அதே இலக்கத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அழைப்பிற்கு பதிலளித்த சந்தர்ப்பத்தில் அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க சர்வதேச உடன்படிக்கையின் கீழ் முன்வைக்கப்பட்ட முதலாவது முறைப்பாடு இதுவெனவும், இந்த உடன்படிக்கை  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அதனை நடைமுறைப்படுத்த இலங்கை இணங்கியுள்ளதாகவும் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

சர்வதேசம் அவதானம் செலுத்தும் ஒரு வழக்கில், இவ்வாறான கீழ்தரமான அழுத்தங்கள் காரணமாக ஒரு நாடு என்ற வகையில் இலங்கை மீது சுமத்தப்படக்கூடிய குற்றச்சாட்டுகள் மும்மடங்காக அதிகரிக்கலாம் என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம் (SLAP) காரணமாக, சர்வதேச சமூகமும் இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இடம்பெறும் இவ்வாறான நிகழ்வுகளின் ஊடாக, அவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இலங்கை பல பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் அது காரணமாக அமையலாம்.”

சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை நினைவூட்டும் வகையில், இத்தகைய அச்சுறுத்தல்கள் சட்டத்தை அணுகுவதைத் தடுக்கும் வெறுக்கத்தக்க முயற்சிகள் என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

“அனைத்து குடிமக்களுக்கும் சட்டத்தின் அணுகல் காணப்படுகின்றது மற்றும் அனைவரும் சமமாக நீதிக்கு உரிமையுடையவர்கள் எனவும், இந்தச் சம்பவத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறையின் தலையீட்டின் மூலம் அரசு நிரூபித்துக் காட்ட வேண்டும் என  கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு கருத்து வெளியிட்டுள்ளது.”

கபில குமாரவின் தாயாருக்கு எதிரான மரண அச்சுறுத்தலுக்கு எதிராக சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.