யாழ்ப்பாணத்தில் இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படைச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் இன்று அதிகாலை கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போது நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் படகொன்றில் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளதை அவதானித்து அவர்களைக் கைது செய்யக் கடற்படையினர் முயன்றனர்.
கடற்படை படகில் இந்திய மீனவர்களின் படகுக்குச் சென்ற கடற்படைச் சிப்பாய்கள் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். அதன்போது கடற்படைச் சிப்பாய் ஒருவர் காயமடைந்த நிலையில் கடலில் வீழ்ந்து உயிரிழந்தார்.
அதையடுத்து மேலதிக கடற்படையினர், இந்திய மீனவர்களின் படகு நின்ற இடத்துக்குச் சென்று படகில் இருந்த 10 மீனவர்களையும் கைது செய்து கடற்படைப் படகில் ஏற்றினர்.
கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும், அவர்களின் படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த கடற்படைச் சிப்பாயின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.