Sunday, June 30, 2024

Latest Posts

மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு ஐ.நா வதிவிட பிரதிநிதியை சந்தித்து கலந்துரையாடல்   

இலங்கை ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு இன்று கொழும்பில் நிகழ்ந்தது.

இதன்போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் தமுகூ/ஜமமு கேகாலை மாவட்ட அமைப்பாளர் எம். பரணிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்,

நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை உட்பட, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகலை ஆகிய மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள பெருந்தோட்ட பிரதேசங்களில், நவீன அடிமைத்துவ அம்சங்களுக்கு மத்தியில், மலையக சமூக குடும்பங்கள்  வாழ்கின்றன.

இம்மக்களுக்கு  பெருந்தோட்ட நிலங்களில், வதிவிட காணி உரிமை, வாழ்வாதார காணி உரிமை உள்ளிட்ட உரிமைகளை பெற்று தந்து அவர்களை இந்நாட்டின் முழுமையான பிரஜைகளாக்கும் கொள்கையை தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்கின்றது.

அடுத்து வரும் ஆட்சி மாற்றத்தை அடுத்து, இது ஒட்டு மொத்த பெருந்தோட்ட துறையிலும் முறை மாற்றமாக பரிணமிக்க வேண்டும். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் நாம் இன்று ஈடுபட்டுள்ளோம். இந்த விவகாரங்கள தொடர்பான உள்நாட்டு அரசியல் சட்டவாக்க நடவடிக்கைளை தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொள்ளும்.

அதற்கான பலம் மற்றும் தூரப்பார்வை எம்மிடம் உள்ளது. அடுத்த ஆட்சி மாற்றத்துக்கு உள்ளே சென்று திட்டங்களை வகுப்பதை விட, முன்கூட்டியே  முன் தயாரிப்பு  நடவடிக்கைகளில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம்.  இந்த விவகாரம் தொடர்பில் மலையக சிவில் சமூகத்துடனும் நாம் தற்போது கலந்து உரையாடுகிறோம்.

மக்கள் ஆணை கொண்ட அரசியல் பிரநிதிகளுடன் இணைந்து பணியாற்ற கூடிய மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பற்றியும் நாம் வெகு விரைவில் சர்வதேச சமூகத்துக்கு அறிவிப்போம் எனவும், ஐநா நிறுவனங்களான உணவு விவசாய நிறுவனம், யுனிசெப், உலக உணவு நிறுவனம்  ஆகியவை ஊடாக எமக்கு தொழில்நுட்ப, அபிவிருத்தி, ஒத்துழைப்புகளை வழங்க ஐநா முன் வர வேண்டும் என்ற கோரிக்கையையும், நாம்  இலங்கை ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேயிடம் முன் வைத்துள்ளோம். எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட இலங்கை ஐநா வதிவிட பிரதிநிதி ஆவன செய்வதாக உறுதி அளித்தார் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.