Saturday, November 23, 2024

Latest Posts

காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் குறித்து சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயற்படவில்லை என குற்றச்சாட்டு

இறுதிக் கட்டப் போரில், இலங்கையின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது சரணடைந்த பின்னர் காணாமல்போன தமது உறவினர்களுக்கு நாட்டில் நீதி கிடைக்கப்பெறவில்லை என தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வரும், இலங்கையில் மிக நீண்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்ப் பெண்கள், நீதிக்கான போராட்டத்தில் பயனுள்ள வகையில் பங்களிப்பு வழங்காமை குறித்து சர்வதேச சமூகத்திற்கு எதிராக தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜூன் மாதத்தின் இறுதி வாரத்திலும் ஜூலை முதலாம் திகதியும் வடக்கு கிழக்கின்  8 மாவட்டங்களில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி எட்டு போராட்டங்களை முன்னெடுத்த பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச சமூகத்திடமே தாம் நீதியை கோருவதாக ஒரே குரலில் வலியுறுத்தியுள்ளனர்.

நீதிக்காகப் போராடும் தமிழ்த் தாய்மார்கள் இலங்கை அரசிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை என கடந்த ஜூன் 25ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டத் தலைவி கோகிலவாணி கதிர்காமநாதன் வலியுறுத்தினார்.

“எங்களது உறவுகள் எங்களுக்கு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். எங்கள் உயிர் எங்களுடன் இருக்கும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும். இலங்கை அரசாங்கத்திடம் நாங்கள் கொடுப்பனவுகளையோ உறவுகளையோ கேட்கவில்லை. சர்வதேசத்திடமே எங்கள் உறவுகளை கேட்டு நிற்கின்றோம். சர்வதேசம்தான் எங்களுக்கு எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும்.” என்றார்.

கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போரில் தமது உறவுகளை அழித்தொழிக்க உதவிய சர்வதேச சமூகத்திடம் நீதி கோருவதாக குறிப்பிட்டார்.  

‘சர்வதேசம் அறியும்’

“எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது? எங்களது உறவுகள் இருக்கின்றார்களா? இல்லையா? எங்கள் உறவுகளை கொண்டுச் சென்று என்ன செய்தார்கள்? அவர்களுக்கு தண்டனை வழங்கி எங்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். எங்களுக்கு சர்வதேசமே நீதியை பெற்றுத்தர வேண்டும். போராட்டத்தில் எங்களது உறவுகள் அழிக்கப்பட்டமைக்கும் அவர்கள்தான் அரசாங்கத்திற்கு உதவி செய்தார்கள். அவர்களிடம்தான் நீதியையும் கேட்கின்றோம். அவர்களை எங்கே வைத்திருக்கின்றார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.”

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி, அவர்களின் 2,687 நாட்கள் தொடர் போராட்டத்தை நிறைவு செய்து கடந்த ஜூன் 30ஆம் திகதி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

“எங்களுக்கான நீதியை சர்வதேசத்திடம் இருந்துதான் கேட்டிருக்கின்றோம். இலங்கை அரசாங்கம் ஒருதபோதும் நீதியை பெற்றுத்தராது. தரப்போறதும் கிடையாது. ஆகவே மனித உரிமைகளை நேசிக்கின்ற உறவுகள் இணைந்து எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும். புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு மத்தியில்தான் போராடிக் கொண்டிருக்கின்றோம். புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்களும் விலை போகாமல் ஒற்றுமையாக நின்று, நீதிக்கான இந்த போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும்.”

அரசாங்கம் தமது பிள்ளைகளின் தலைவிதியை வெளிப்படுத்தத் தவறிவிட்டதாகவும், வருடா வருடம் புதிய ஆணைக்குழுக்களை அமைத்து வருவதாகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவி மனுவல் உதயச்சந்திரா, ஜூன் 28ஆம் திகதி மன்னாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டார்.

“14 வருடங்களில் 14 ஆணைக்குழுக்களை இந்த அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. உண்மை ஒற்றுமை என்ற ஆணைக்குழு மன்னாருக்கும் வந்தது. உண்மை எங்களது நாட்டில் இருக்கின்றதோ தெரியவில்லை. ஒற்றுமை எங்கள் நாட்டில் இருக்கின்றதோ தெரியாது. அப்படி இருந்திருந்தால் தமிழ் இனத்திற்கு இவ்வாறானதொரு துன்ப துயரம் தமிழ் இனத்திற்கு வந்திருக்காது. உங்களிடம் தந்த பிள்கைகள், குடும்பம் குடும்பமாக சரணடைந்த பிள்ளைகள், வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளைகளைத்தான் கேட்கின்றோம். இறந்த பிள்ளைகளை கேட்கவில்லை.”

15 வருடங்களுக்கு முன்னர் படையினரிடம் சரணடைந்த தமது பிள்ளைகளைப் பார்க்காமலேயே அனைத்துத் தமிழ்த் தாய்மாரும் இறந்துவிடுவார்களோ? என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைவி சிவபாதம் இளங்கோதை நேற்று முன்தினம் (ஜூலை 1) யாழ்ப்பாணத்தில் கண்ணீருடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

“மே 18 அன்று எங்கள் பிள்ளைகள் அனைவரும் சரணடைந்தார்கள். குடும்பம் குடும்பமாக சரணடைந்தார்கள். கொத்துக் கொத்தாக  குண்டு மழையில் உயிரிழந்தவர்கள் போக எஞ்சியவர்கள், விசாரணை செய்துவிட்டு விடுவோம் என்று பிரான்சிஸ் பாதருடன் 100ற்கும் மேற்பட்ட குழந்தைகளும், பெற்றோரும் சரணடைந்தார்கள். வட்டுவாகலிலுமம் சரணடைய வைத்தார்கள் இராணுவம். விசாரணை செய்துவிட்டு விடுவோம் என்றார்கள். இன்று 15 வருடங்கள் ஆகிவிட்டது. எங்கள் பிள்ளைகளை மீட்கும் முன்னர் நாம் இறந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்பட்டுவிட்டது.”

ஜூன் 27ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திலும், ஜூன் 30ஆம் திகதி திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுத்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

OMP அழுத்தம்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி அமலராஜ் தலைமையில் கடந்த ஜுன் மாதம் 24ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறியக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களால், நெருங்கிய உறவினர் ஒருவரைக்கூட கண்டுபிடிக்கத் தவறியுள்ள, 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் நிறுவப்பட்ட, காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் செயற்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

“இலங்கை அரசாங்கம் ஓஎம்பி அலுவலகத்தை கொண்டுவந்து நட்டஈட்டை கொடுப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றி அந்த பைல்களை குளோஸ் பண்ணுவதற்கான செயற்பாடுகளை சரியான கள்ளத்தனமான வேலைகளை ஓஎம்பி அலுவலகத்தால் செய்துகொண்டுள்ளனர். நான் ஓஎம்பி அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை. எங்கோ இருந்து எங்களுடைய தரவுகளை எடுத்துக்கொண்டு உங்களது ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது உடனடியாக வந்து பதிவு செய்யுங்கள் என்று சொல்லி, இந்த அப்பாவித் தாய்மாரை மரண பதிவை எடுத்தால்தான் ஒரு உதவித் திட்டங்களும் கிடைக்கும் எனச் சொல்லி அவர்களுக்கு கட்டாயப்படுத்தி மரண பதிவுகளை வழங்கி கஷ்டப்படுத்தி ஏற்கனவே கஷ்டப்படும் தாய்மாரை மேலும் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறார்கள். ஒரு பொய்யான ஓஎம்பி அலுவலகம் அல்லது உள்ளக பொறிமுறையை  கொண்டுவந்து ஏமாற்றி கால இழுத்தடிப்பை இலங்கை அரசாங்கம் செய்கிறது.”

பிள்ளைகளைத் தேடி வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் பல வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தாய்மார்கள் பிள்ளைகளின் கதியை அறியாமலேயே இறுதி மூச்சை விடுவதாகவும், ஆனால் இளம் தலைமுறையினர் இந்தப் போராட்டத்தை தொடர்வார்கள் எனவும் அமலநாயகி அமலராஜா நம்பிக்கை வெளியிட்டார்.

“உறவுகளைத் தேடிக்கொண்டிருந்த 200ற்கும் மேற்பட்ட எம்முடைய தாய்மாரை நாங்கள் இழந்துள்ளோம். எமது சாட்சியங்கள் அழிக்கப்படுகின்ற. கண்கண்ட சாட்சியங்கள் நாங்கள் இருகின்றோம். நாங்கள் இல்லாமல் போனால், இந்த கால இழுததடிப்பிற்கு காரணமே இதுதான். நாங்களும் இல்லாமல் போனால் குரல் கொடுக்க யாரும் இல்லை என்றே, இந்த இலங்கை அரசாங்கமும், அதனுடன் சேர்ந்து செயற்படுபவர்களும் அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இளம் சந்ததி இதனை தொடர்ந்து கொண்டுபோகும்.”

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.