ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றியிருக்கும் குழுவொன்று பணத்திற்கு பேராசை கொண்டு நாட்டின் வளங்களை விற்க சதி செய்வதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குறிப்பிட்ட சில அரச நிறுவனங்களை விற்பனை செய்து கொமிஷன் பணம் பெற்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர், குறித்த ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் தற்போது இழுத்தடித்து வருவதாகவும், பசிலுக்கும் அவரது அணியினருக்கும் எதிராக ஜனாதிபதியை உறுதியாக இருக்குமாறும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினரையும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தாக்கி பேசிய மேர்வின் சில்வா, முடிந்தால் தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சவால் விடுத்துள்ளார்.
களனி பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேர்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.