ரணில் தலைமையிலான அரசு மீளவும் தோற்றம் பெற வேண்டும் – எஸ்.பி. வலியுறுத்து  

0
59

இலங்கையின் எதிர்காலத்துக்காகவேனும் ஜனாதிபதி தலைமையிலான அரசு மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று  ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியின் போது நாடு வங்குரோத்து நிலையடையவில்லை என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையில் அரசைப் பொறுப்பேற்று சவால்களை வெற்றி கொண்டுள்ளார்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான பொருளாதார தாக்கத்தை ஒரு தரப்பினர் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தனர். ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக போதைப்பொருள் பாவனையாளர்கள் கூடாரமிட்டு தேசிய பாதுகாப்பையும் சட்டவாட்சியையும் கேள்விக்குள்ளாக்கினார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022ஆம் ஆண்டு போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வராமலிருந்திருந்தால் நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும். போராட்டக்காரர்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டு பயங்கரவாதிகளைப் போன்று  செயற்பட்டவர்களை அடக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் வியாபாரிகளைக் கண்டு அச்சமடையப் போவதில்லை.

ஜனாதிபதியின் சிறந்த திட்டங்களால் குறுகிய காலத்தில் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது. தற்போதைய முன்னேற்றங்களைத் தொடர வேண்டுமாயின் நாட்டின் எதிர்காலத்துக்காகவேனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தோற்றம் பெற வேண்டும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here