ஜனாதிபதி பதவிக்கு தான் தகுதியானவர் என்று நம்புவதாகவும், வாய்ப்பு கிடைத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
திசாநாயக்க, தனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வரலாறு, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சரவை அமைச்சர் மற்றும் ஆளுநராக அனுபவம் இருப்பதாகவும், திருடாத ஒரு நபராக தான் தகுதி பெற்றுள்ளதாகவும் கூறினார்.
கொழும்பில் இன்று (30) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ஜனாதிபதியாகும் கனவுகள் பலருக்கு உண்டு. அந்தக் கனவை எப்படி நனவாக்குவது என்பது வேறு கதை. 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, அனுர குமாரவுக்கு அப்படி ஒரு கனவு இருந்திருக்க வேண்டும். ஆனால் அனுர குமார ஜனாதிபதியாக வருவார் என்று நாங்கள் யாரும் நினைத்ததில்லை.”
இருப்பினும், முன்னாள் அமைச்சர் தனது தகுதிகளின் அடிப்படையில், இன்று செய்வதை விட சிறப்பாக மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று கூறினார்.
மேலும் பேசிய நவீன் திசாநாயக்க, “அரசாங்கத்திடம் ஒரு வரையறுக்கப்பட்ட திட்டம் மட்டுமே உள்ளது. அரசாங்கம் குறிப்பாக மோசடி, ஊழல் மற்றும் திருட்டுக்கு எதிராக செயல்படுகிறது. ஆனால் மக்களின் அன்றாடப் பிரச்சனைகள், குறிப்பாக வாழ்க்கைப் பிரச்சனை, பொருட்களின் விலை உயர்வு, வேலைப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் அரசாங்கம் எந்தக் கவனமும் செலுத்துவதில்லை என்று நான் எப்போதும் கூறுவேன். இது ஒரு கட்டத்தில் சிக்கிக் கொள்ளும். ஏனெனில் ஒரு பொருளாதாரத் திட்டம் இல்லாமல், ஒரு நாட்டை முழக்கங்களால் மட்டும் வழிநடத்த முடியாது.”