வாகனங்களில் ‘சீட் பெல்ட்’ சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை அந்த சட்டத்தை பின்பற்றத் தவறும் பஸ் வண்டிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
போக்குவரத்து குழுக்கல் மத்தியில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
”வாகன விபத்துகளினால் வருடாந்தம் 2350 பேர் உயிரிழக்கின்றனர். அத்துடன் சுமார் 6000 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகின்றனர்.
அதனைக் கருத்திற் கொண்டு ‘ரோட் சேப்டி’ திட்டம் ஒன்றை 2025 மற்றும் 2026 ஆம் வருடங்களுக்காக போக்குவரத்து அமைச்சு முன்வைத்துள்ளது. அத்துடன் அதன் ஒரு அம்சமான ‘சீட் பெல்ட்’ தொடர்பிலும் நாம் வர்த்தமானி ஒன்றை வெளியிடவுள்ளோம்.
இந்த சட்டம் 2011ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்தாலும் எவரும் அதை கணக்கில் எடுப்பதில்லை. அதிவேக நெடுஞ்சாலைகளிலும் சீட் பெல்ட் இன்றி பயணம் செய்கின்றனர்.
இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2300 பேர் மரணிப்பதை 2000ஆக நாம் குறைக்க முடியும்.
அந்தவகையில் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி முதல் அனைத்து அதிவேக நெடுஞ்சாலையிலும் இது கடுமையாக்கப்படும். அதிகமான பஸ் வண்டிகளில் சீட் பெல்ட் காணப்படுகிறது. அதை அணிவதே அவசியமாகும்.
அந்தவகையில் இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். அவ்வாறு செயல்படாத பஸ் வண்டிகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.