Tuesday, May 7, 2024

Latest Posts

பொலிஸ் அதிகாரம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் – கூட்டமைப்பு எம்பிக்கள் இடையே சந்திப்பு

13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (9) பிற்பகல் பொது பாதுகாப்பு அமைச்சில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழுவினருக்கு இடையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் அதிகாரங்களைக் கோருவதற்கான காரணங்களைக் கேட்டறிந்தார்.

அங்கு உலகின் ஏனைய நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு அதிகாரப்பரவலாக்கத்தின் அவசியத்தை தமிழ் கூட்டமைப்பினர் விளக்கியதுடன், தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

பொலிஸ் அதிகாரங்களை வகுக்காமல் அப்பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் அமைச்சர் கலந்துரையாடினார்.

இங்கிலாந்து, இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட அதிகாரப் பகிர்வு மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள், அங்கு பயன்படுத்தப்படும் முறைகளை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் விளக்கமளித்தனர்.

இங்கிலாந்து மற்றும் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக கலாச்சாரங்கள் முற்றிலும் வேறுபட்டவை என அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டினார்.

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஏன் என பொது பாதுகாப்பு அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

மாவட்டக் குழுக்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நீண்ட தூரம் சென்று கொழும்பு வர வேண்டியிருப்பதாலும், சிலரது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான உத்தேச விடயங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும், ஆனால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுவையும் நியமிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடமாநிலம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், பல சிறு குழந்தைகள் போதைப்பொருளுக்கு அதிகளவில் அடிமையாகி இருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக அமைப்புகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவிற்கு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்களை எந்த நேரத்திலும் வழங்குவதாகவும், அவ்வாறான தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்தார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் உரிய விசேட பொலிஸ் குழு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான தகவல்களை பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் எந்த நேரத்திலும் கலந்துரையாட முடியும் எனவும் டிரான் அலஸ் தெரிவித்தார்.

இச்சந்திப்புக்காக, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் சி.டி.சி.டி.விக்ரமரத்ன, மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடேக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக இரு தரப்பினரும் அடுத்த விவாதத்தை பதினைந்து நாட்களில் நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.