Saturday, September 14, 2024

Latest Posts

1700 ரூபா சம்பளத்தை வழங்க 7 கம்பனிகள் இணக்கம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்ளத்தை 1700 ரூபாயாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை சம்பள நிர்ணயச் சபையை அழைத்துச் பேசி அந்த தீர்மானத்தை செயற்படுத்தத் தேவையான சட்டங்களை கொண்டுவர தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமலிருக்கும் சேமலாப நிதியை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகளை அடுத்த வருடத்திலிருந்து முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்களுடன் இன்று (10) கண்டி கரலிய மண்டபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

இதன்போது தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியிடன் நேரடியாக முன்வைக்கப்பட்டதோடு, அதற்கு ஜனாதிபதி சாதகமான பதில்களையும் வழங்கியிருந்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டு மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

எப்படியோ தற்போது நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படாவிட்டாலும், மக்களுக்கு பெருமளவு நிவாரணங்களை வழங்க முடிந்துள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டை விட மக்கள் சுமூகமாக வாழும் நிலைமை உருவாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே எம்மால் அவ்வாறானதொரு நிலையை உருவாக்க முடிந்தது.

எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகளை எட்டியுள்ளோம்.

அதன்படி 2042 ஆம் ஆண்டு வரை நாங்கள் வாங்கிய கடனை மீளச் செலுத்த வேண்டும். இந்த உடன்படிக்கைகளில் இருந்து நாம் விலகிக் கொண்டாலோ அல்லது திருத்தம் செய்ய முயற்சித்தாலோ அதன் பலன்களை இழக்க நேரிடும்.

அப்போது ஒரு நாடாக நாம் பழைய நிலைக்குத் தள்ளப்படுவோம். மீண்டும் வரிசை யுகம் வரும். எனவே இந்த திட்டத்தை தொடருவோமா அல்லது கைவிடுவோமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் வெற்றி குறித்து நாம் திருப்தியடைய முடியாது. இந்தியாவைப் போல நாமும் பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும்.

2048 ஆம் ஆண்டுக்குள் அந்த விரைவான வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

அதனால் நாட்டை பொறுப்பேற்கத் தலைவர்களை தேடப் போகிறோமா அல்லது ஒலிம்பிக் போட்டிகளில் ஓடுவதற்கு தலைவர்களை தேடுகிறோமா என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.

தோட்ட தொழிலாளர்களுக்கு பல வருடங்களாக ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படவில்லை. அவற்றை வழங்கும் பணிகள் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும்.

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதால் அதனை வழங்கும் இயலுமை அரசாங்கத்திற்கு கிடைக்கும்.

மேலும், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தோட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது. மேலும், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

ஆனால் அந்த நிவாரணத்தை தோட்ட மக்களுக்கு இன்னும் வழங்க முடியவில்லை.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு 07 பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்குப் பின்னர் அந்த அமைச்சின் பொறுப்பு ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளக் நிர்ணயச் சபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரவும் அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை சட்டமாக்கவும் முயற்சிகளை முன்னெடுப்போம்.

அந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பழனி திகாம்பரன் எம்.பி ஆகிய இருவரும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.