கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

0
346

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள் அரசாங்க இரசாயன பரிசோதகரிடம் அனுப்பப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

கபில சந்திரசேனவின் உடல் கடந்த 08ஆம் திகதி காலை கொழும்பு கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதனையடுத்து அவரது உடலின் மரணப் பரிசோதனை நேற்று (09) காலை கொழும்பு நீதிமருத்துவ மற்றும் நச்சுவியல் நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்தப் பரிசோதனை, கொழும்பு பிரதம நீதிமருத்துவ அதிகாரி சிரியந்த அமரரத்ன தலைமையிலான ஐந்து பேர் கொண்ட விசேட நீதிமருத்துவ நிபுணர் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவரது உடல் உறுப்புகளிலிருந்து மாதிரிகள் எடுத்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கைகள் அடுத்த சில நாட்களில் கிடைக்கும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய Airbus விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் அமெரிக்க டொலர் 2 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், கபில சந்திரசேன 54 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவர் கடந்த மே 05ஆம் திகதி, 5 இலட்சம் ரூபாய் பணப் பிணை மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூவரின் தலா 100 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் பின்னர், நெருங்கிய உறவினர்கள் என போலியாக காட்டி வெளிப்புற நபர்கள் இருவர் பிணைக்காக முன்னிலையாகியிருந்தது தெரியவந்தது. இதனால் அவரை மீண்டும் கைது செய்ய நீதிமன்றம் மே 07ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

அதன் மறுநாள் காலை கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here