மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுரத்தின் பாரிய உதிரிப் பாகங்களை ஏற்றி வந்த வாகனத்தை நேற்று நள்ளிரவு மன்னார் தீவுப் பகுதிக்குள் நுழைய விடாமல் மக்கள் வழிமறித்துப் போராட்டம் நடத்தியமையை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
காற்றாலை திட்டத்துக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 10 ஆவது நாளை எட்டும் நிலையில் நேற்று நள்ளிரவு காற்றாலை உபகரணங்களை ஏற்றி வந்த பாரிய வாகனத்தை மன்னார் தீவுக்கு நுழையும் வாசலான மன்னார் நீதிமன்ற மூன்றலில் மக்கள் வழிமறித்துத் தடுத்தனர்.
நேற்று பின்னிரவில் தொடங்கிய இந்த வழிமறிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் அங்கு திரண்டு இருந்தனர்.