எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று வியாழக்கிழமை கையளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.
தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல வரவேற்றார்.
பின்னர் தலதா மாளிகையின் மேல்மாடிக்கு சென்ற ஜனாதிபதி, மத வழிபாடுகளில் ஈடுபட்டார். தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் நலன் விசாரித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக, அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி , மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. ஸ்ரீ சுமங்கல தேரரின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் தேரருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார். தேரர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார்.
அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வண.வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அஸ்கிரி மகாநாயக்க தேரர் தலைமையிலான அஸ்கிரி பீடத்தின் மகா சங்கத்தினர், இதன்போது ஜனாதிபதிக்கு பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.