Thursday, May 2, 2024

Latest Posts

உலக வானிலையியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட ரேடார் கட்டமைப்பை கட்டமைப்பதில் தேல்வி

உலக வானிலையியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட ரேடார் கட்டமைப்பை கோணகல பிரதேசத்தில் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தேல்வியடைந்த வேலைத்திட்டம் காரணமாக அரசாங்கத்துக்கு 78 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) அண்மையில் தெரியவந்தது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்துக் கலந்துரையாடப்பட்டபோதே இந்த விடயம் தெரியவந்தது.

2008ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் குறித்த ரேடார் கட்டமைப்புக்காக 402 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், உலக வானிலையியல் அமைப்பினால் 323 மில்லியன் ரூபா மீண்டும் வழங்கப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி குறித்த இயந்திரத்தைப் பரிசோதித்துப் பார்த்ததுடன், இது இயங்கும் நிலையில் இல்லையென்பதால் அதனை நாட்டுக்குக் கொண்டு வரவேண்டாம் என்று அறிவித்திருப்பதாகத் தெரியவந்தது. இந்தக் கட்டமைப்பு பொருத்தப்படவிருந்த இடத்துக்கான வழியை சரிசெய்வதற்காக பல வருடங்கள் சென்றிருப்பதாகவும், இதனால் இந்த இயந்திரம் காலாவதியாகும் நிலைக்குச் சென்றிருப்பதாகவும் கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இதனைக் கொண்டு செல்வதற்கான பாரம் தூக்கி மற்றும் வீதி சரிந்து வீழ்ந்தமையால் சில உபகரணங்கள் சேதமடைந்திருப்பதாகவும், எஞ்சிய உபகரணங்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் பொலிஸ் மற்றும் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது. இதற்கமைய பாரிய நஷ்டம் ஏற்பட்டு முழுமையாகக் தோல்வியடைந்துள்ள இந்தத் திட்டத்துக்குப் பதிலாகப் புதிய தொழில்நுட்பத்துடன் வளிமண்டலவியல் திணைக்களம் சரியான கேள்விப் பத்திரங்களைக் கோரி வினைத்திறனான வேலைத்திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

தற்பொழுது நிலவும் வரட்சி நிலைமை தொடர்பில் சரியான எதிர்வுகூறல்கள் மேற்கொள்ளப்படாமை மற்றும் அது தொடர்பான அறிக்கை குறித்தும் இங்கு கேள்வியெழுப்பப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதத்தில் நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் உள்ளடங்கலாக பிராந்திய நாடுகளுடன் நடத்திய பருவகாலம் குறித்த பேச்சுவார்த்தையில் இது பற்றித் தெரியப்படுத்தியதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் இது தொடர்பான தகவல்கள் தனக்கு வழங்கப்படவில்லையெனக் கூற முடியும் என்பதால் சட்டத்தின் ஊடாக சட்டரீதியான ஏற்பாடொன்றைத் தயாரிக்கும் வரை அமைச்சரவைத் தீர்மானத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களுடன் ஒன்றிணைந்த தீர்மானமொன்றைத் தயாரிக்குமாறும் குழு சுட்டிக்காட்டியது. ஒரு மாத காலத்துக்குள் இது தொடர்பில் கோபா குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

வெளியிடப்பட்ட எதிர்வுகூறல்களை அடைவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த தரவு உள்ளதா என்றும் கேட்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்பது தெரியவந்ததால், உலகின் பிற நாடுகளின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு முறையான திட்டத்தை விரைந்து தயாரித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

453 மழை மானிகள் பொருத்தப்பட்டுள்ள போதும் அதில் 73 மானிகள் இயங்க முடியாத நிலையில் இருப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் 2018ஆம் ஆண்டு 122 தானியங்கி மழை மானிகள் காணப்பட்டபோதும் பற்றரி செயற்படாமை போன்ற காரணிகளால் அவற்றில் 70 மானிகள் இயங்காமை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த மழை மானிகளை முறையாக நிறுவி உடனடியாகத் தரவுகளைப் பெறுவதற்கான திட்டத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு அவர் திணைக்களத்திற்கு அறிவித்தார்.

திணைக்களத்திடம் கணக்காய்வு அதிகாரி இல்லாமையால் கணக்காய்வுக் குழு கூடப்படாமையும் இங்கு தெரியவந்தது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அரச நிறுவனங்களின் செயற்திறனை அளவிடும் கோபா குழுவின் மிகக்குறைந்த புள்ளிகளைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்று என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதோடு, திணைக்களத்தின் மோசமான நிர்வாகம் குறித்து தனது கடும் அதிருப்தியையும் வெளியிட்டார். எனவே, நிர்வாகப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க அமைச்சில் மேலும் தலையிடுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், அசோக் அபேசிங்க, (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, சஹான் பிரதீப் விதான மற்றும் மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.