பாராளுமன்றத்தின் பொறுப்புகளை சரியாக இனம் கண்டு நிதி பற்றிய குழு மேற்கொண்டிருக்கும் முடிவு பாராட்டத்தக்கது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பாராளுமன்றத்தின் வகிபாகத்தையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நிதி பற்றிய குழு மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தை முன்னிட்டு அக்குழுவின் பதில் கடமை தலைவர் உள்ளிட்ட குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தனது மரியாதையை தெரிவித்துக் கொள்கின்றது.
நாட்டு மக்களின் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் பொருட்கள் பலவற்றுக்கு அமுலாகும் வகையில் வழங்கப்பட்டிருக்கும் தீர்மானத்தை முன்னிட்டே நாம் இந்த பாராட்டை தெரிவிக்கின்றோம்.
மேலும் பாராளுமன்றத்தின் அனைத்து குழுக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் கடமைகளை நினைவுபடுத்தும் அதேவேளை அவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களை ஊக்குவிப்பது சமுதாயத்தின் கடமை என்பதையும் கருத்தில் கொண்டு நாம் இந்த பாராட்டை தெரிவிக்கின்றோம்.
அதற்கமைய சீமந்து முதலான கட்டுமான துறைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி மற்றும் வினியோகம் செய்யும் நிறுவனங்கள் முறைகேடாக பெறும் இலாபங்களை ஓரளவுக்காவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தின் நிதி பற்றிய குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அதேபோன்று கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 198 ரூபாயாக பேணுவதற்கு சாத்தியம் இருப்பதை சுட்டிக்காட்டி, அதற்கான தீர்மானத்தையும் வழங்கி உள்ளனர்.
பாராளுமன்ற நிதி குழுவின் இந்த தலையீடானது பாராளுமன்றத்தில் அடிக்கடி இடம்பெறுகின்ற மோதல்கள் மற்றும் பலனற்ற தர்க்கங்களில் இருந்து மாறுபட்டு மக்களுக்காக மேற்கொண்ட சிறந்த தலையீடாகவே நாம் கருதுகின்றோம்.நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் சில இறக்குமதியாளர்கள் நிலைமையை கருத்தில் கொள்ளாது அநீதியான விதத்தில் லாபம் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிரான விசாரணைகளுக்கு தலையீடுகளை மேற்கொள்வது பொறுப்புடைய நிறுவனங்களின் கடமையாகும்.
நாட்டின் நிதி நிர்வாகம் உள்ளிட்ட கொள்கை வகுப்பு நடவடிக்கைகளின் முதன்மை பொறுப்பு பாராளுமன்றத்திற்கே வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் போது பாராளுமன்ற குழுக்களுக்கும் பாரிய கடமைகள் வழங்கப்பட்டிருக்கின்றது. எமது அமைப்பு இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளது.
பாராளுமன்றத்தின் நிதி பற்றிய குழு மேற்கொண்டிருக்கும் இந்த முடிவானது பாராட்டத்தக்கது. நாட்டின் நடுத்தர வர்த்தக பிரிவினருக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் அதிகளவிலான வட்டி விகிதாசாரங்கள் தொடர்பிலும் இக்குழு கவனம் செலுத்துவது சிறப்பம்சம் வாய்ந்தது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தற்போது நாட்டின் வர்த்தக வங்கிகளின் அதிக வட்டி விகிதாசாரங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பது தெளிவாகின்றது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் வெளியிட்டிருக்கும் கட்டளைகளை கருத்தில் கொண்டு அது தொடர்பிலும் ஏதேனும் தலையீடுகளை மேற்கொள்ளுமாறு இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தின் நிதி பற்றிய குழுவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
கரு ஜயசூரிய
தலைவர்
சமூக நீதிக்கான தேசிய இயக்கம்