Sunday, October 6, 2024

Latest Posts

தென்பகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது தலையில் மண் அள்ளிப்போடும் செயல்!

தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளிப்போடும் செயல் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (08) இரவு தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேந்திரனை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று பரவலாக பேசப்படுகின்ற மூன்று தென் பகுதி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்கானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளி கொட்டுவதற்கு சமமாகவே இருக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

இதில் சஜித் பிரேமதாச ஆயிரம் விகாரைகளை கட்டுவதாக தெரிவித்து இருக்கின்றார். இந்த நிலையில் யாரோ ஒரு கட்சி கூறுகின்றது என்பதற்காக நீங்கள் அவருக்கு அளிக்கின்ற வாக்கானது விகாரைகளுக்கு வைக்கின்ற ஒவ்வொரு கல்லாக தான் இருக்கும்.

அதேபோல், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கானது இருக்கின்ற நிலங்களை இன்னும் இழந்து செல்வதாகவே அமையும். ரணில் விக்கிரமசிங்கவே ஒரு கட்டமைப்பாக ஒரு தேசமாக ஒரு இனத்தின் விடுதலைக்காக இருந்த எம்மை சிதைத்த பெருமை அவரைத் தான் சாரும்.

அதே போல் அனுரகுமார திசாநாயக்க எமது இணைந்த வடக்கு கிழக்கை பிரித்தவராக இருக்கின்றார். இவ்வாறானவர்களை தென்பகுதியில் இருந்து அழைத்து வந்து மாலை போட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்கின்ற ஒரு வெட்கம் கெட்ட சமூகமாக நாம் மாறி வருகின்றோம்.

ஆகவே இந்த பொதுக் கட்டமைப்பு ஊடாக ஒரு செய்தியை சொல்வதற்காகவே நான் வந்திருக்கின்றேனே தவிர, ஒரு ஜனாதிபதியாக வருவதற்கு அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அந்த கதிரையை தட்டி பறிப்பதற்காகவும் இல்லை.

ஈழ மண்ணில் இழந்த உரிமைகளை மீட்பதற்காகவும் நாங்கள் நாங்களாகவே இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் தென் இலங்கைக்கு ஏன் ஒன்பதாவது ஜனாதிபதியாக வர இருக்கின்றவருக்கும் அந்தத் தகவலை நாங்கள் கொடுக்க இருக்கின்றோம்.

எங்களுடைய வடக்குக் கிழக்கில் ஒரு இனமாக ஒரு தேசமாக ஒன்றிணைந்த கட்டமைப்புக்குள் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை பெறுவதற்காக எங்களுடைய இனம் ஒன்றிணைந்து தனது ஆதரவை தெரிவிக்கின்றது என்கின்ற ஒரு செய்தியை நாங்கள் அவர்களுக்கு சொல்லி இருக்கின்றோம்.

இந்த 13 நாட்களுக்கு பல போலியான செய்திகள் என்னை பற்றி வரலாம். இருபதாம் திகதி கூட அரியநேந்திரன் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார் என்ற செய்தி கூட இந்த சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளிவரலாம். ஆனால் நான் எந்த விதமான மாற்றத்திற்கு உட்பட போவதில்லை.

ஆகவே, நீங்களும் போடுகின்ற புல்லடியானது எமது இனத்திற்கான புள்ளடி எமது விடுதலைக்கான புள்ளடி எமது மண்ணுக்கான மண் மீட்புக்கான புள்ளடி என்பதை உணர்ந்து செயல்படுங்கள் எனத் தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.