கொழும்பு – மட்டக்குளி, கந்தஉட பகுதியில் இன்று (செப்டம்பர் 16) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த சொகுசு கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்குளி கந்தஉட பகுதியில் எதிரே வந்த மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் அடுத்தடுத்து மோதி நொறுக்கியதில் இப் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாரா மற்றும் அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
