நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை விரைவில் மீளப்பெற வேண்டும்

0
142

கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையிலான சட்டங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தினால் நிறைவேற்ற உத்தேசித்துள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்துகின்றது.

அரசியலமைப்பின் ஊடாக உறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகிய பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் இதனூடாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. மேலும் நியாய கோட்பாடுகளை மீறி, நீதிமன்ற கட்டமைப்புக்கு புறம்பாக சென்று, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு நீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடுவதற்கான சூழ்நிலைகளை ஏற்பாடு செய்திருப்பதும் மிக பாரதூரமான விடயமாகும். மேலும் இலங்கையின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய பல சட்ட ஏற்பாடுகளும் இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இணையத்தளத்தின் ஊடாக நாட்டின் சில நபர்களுக்கும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களை தடுப்பதற்கும் , மேற்படி வசதிகளை தவறாக பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய குற்றங்களை தடுத்து, அந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான சட்ட ஏற்பாடுகள் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

மேலும் இது போன்ற நபர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு தண்டனை சட்டக் கோவையை காலத்திற்கு ஏற்ப திருத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனால் இதுபோன்ற தேவைகளை முன்னிலைப்படுத்தி நாட்டின் ஜனநாயக உரிமைகளை அடக்குவதற்கு மேற்கொள்ளும் இது போன்ற முயற்சிகளை கண்டு மிகுந்த மன வேதனை அடைகின்ற அதேவேளை இது போன்ற முயற்சிகள் தொடர்பில் தயக்கமின்றி எமது எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

ஆகையால் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்க கூடிய நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். மேலும் நாட்டு பிரஜைகளின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய வகையில் இணையதளத்தை பயன்படுத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கூடியவாறு தண்டனை சட்டக் கோவை உள்ளிட்ட சட்டங்களை திருத்தத்திற்கு உள்ளாக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

சுனில் ஜயசேகர
பொதுச் செயலாளர்
சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here