பொலிஸ் மா அதிபராக செயற்பட சி. டி. விக்கிரமரத்னவுக்கு இரண்டாவது தடவையாக வழங்கப்பட்ட 3 மாத கால சேவை நீடிப்பு நாளையுடன் (9) முடிவடைவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி முதல் இந்த சேவை நீடிப்பு வழங்கினார்.
2020 நவம்பர் மாதம் இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சி. டி. விக்கிரமரத்ன பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து மார்ச் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்கியிருந்தார்.
முதல் சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் 09ஆம் திகதி மேலும் மூன்று மாத காலத்திற்கு இரண்டாவது சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.
பொலிஸ் மா அதிபரின் சேவை முடிவடைந்த காரணத்தினால் அப் பதவிக்கு வேறொரு அதிகாரி நியமிக்கப்படுவாரா அல்லது சி. டி. விக்கிரமரத்னவுக்கு மூன்றாவது சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.