வெள்ளத்தினால் பலர் பாதிப்பு

0
157

பலத்த மழையுடனான வானிலையினால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தனகலு ஓயா தூனமலே பகுதியில் வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளது.களனி கங்கை கொழும்பு நாகலகம்வீதி, ஹங்வெல்ல மற்றும் க்ளன்கோஸ் பகுதிகளில் சிறிய அளவிலான வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளதுடன் கிங் கங்கை பத்தேகம பகுதியில் சிறிய அளவிலான வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளை அண்மித்து தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் களனி கங்கையின் பல இடங்களில் முப்படையினரின் உதவியுடன் மணல் மூடைகளை பயன்படுத்தி தற்காலிக வெள்ளத்தடுப்பு அணைகளை அமைக்கும் ஏற்பாடுகள் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் 22,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் சாத்தியம் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதன் காரணமாக மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகும் வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here