Friday, January 17, 2025

Latest Posts

மிரிசுவில் படுகொலையாளிக்கு வழங்கப்பட்ட மன்னிப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க அனுமதி

மிரிசுவில் படுகொலைகளைச் செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கியமையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்ய இலங்கை உச்சநீதிமன்றம் இணங்கியுள்ளது.

அந்த படுகொலைச் சம்பவத்தை செய்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜண்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பதவியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து கொழும்பிலுள்ள மாற்றுக் கொள்ளைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க இலங்கை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (13) அனுமதியளித்தது.

2000ஆம் ஆண்டு டிசம்பரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மிரிசுவில் கிராமத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 8 தமிழ் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 2015ஆம் ஆண்டு சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க குற்றவாளியாக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் 2019இல் உறுதி செய்தது.

எனினும், கொவிட்-19 பெருந்தொற்றுக்கால நெருக்கடியின் போது அதைச் சமாளிக்க இலங்கை போராடிக் கொண்டிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ச 2020 மார்ச் 26 அன்று, அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து இப்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.

இந்த மனுவை மேலும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், எதிர்மனுதாரர்களுக்கு பதில் அளிக்க கால அவகாசம் அளித்து, வழக்கின் விசாரணையை 2024 மே 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மிரிசுவிலைச் சேர்ந்த ஒன்பது அப்பாவி தமிழ் பொதுமக்கள் தங்களின் பூர்வீக வீட்டிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இரண்டு இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கண்கள் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அதில் ஒரு இளைஞர் தப்பினார் மீதமுள்ளவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு அவர்களின்   உடல்கள் அருகிலேயே புதைக்கப்பட்டன.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சுனில் ரத்நாயக்க மீது வழக்கு தொடுக்கப்பட்டு அது 13 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர் 2015 ஜூலை மாதம் கொழும்பு உயர்நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டார்.

தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் பின்னர் நீதிபதிகள் 9 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என உறுதி செய்தனர். இதையடுத்தே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் சுமார் ஐந்து தசாப்தங்களாக இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த வேளையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “தாமதங்கள் இருந்தபோதிலும், வழங்கப்பட்டபோது இது ஒரு அரிய நிகழ்வு” எனக் கூறியது.

இலங்கை அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் குற்றவாளி மரண தண்டனை விதிக்கப்பட்டவராக இருக்கும் போது கூடுதல் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

கூடுதலாக, ஜனாதிபதி எந்தவொரு அதிகாரத்தையும் நியாயமாகவும், பொது நலனுக்காகவும் மாத்திரமே  பயன்படுத்த வேண்டும் என்கிறது அரசியல் யாப்பு.

எவ்வாறாயினும், இந்த வழக்கில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான தீர்மானம் தன்னிச்சையானது, நியாயமற்றது, சட்டத்திற்கு புறம்பானது மற்றும் பொதுநலன் கருதி எடுக்கப்படவில்லை என்பது மனுதாரர்களின் நிலைப்பாடாகும்.  மேலும் ரத்நாயக்கவுக்கு உரிய சட்டவழிமுறைகள் அளிக்கப்பட்டன எனவும் நீதிபரிபாலனத்தில் பிறழ்வு ஏதுமில்லை எனவும் அந்த நிலையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

”உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் தண்டனையை உறுதிசெய்துள்ள நிலையில், ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் , சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு மன்னிப்பு என்பது மக்களின் இறையாண்மையையும், அரசியலமைப்பின் 12 (1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகும் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பு (ICJ) அந்த நேரத்தில் இந்த பொது மன்னிப்பைக் கண்டித்து “இந்த மன்னிப்பு இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் மீது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறியது.

மரண தண்டனை நீக்கப்பட்டதை ICJ வரவேற்றிருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் தன்னிச்சையான முறையில் அத்தகைய மன்னிப்பை வழங்கியதை கடுமையாக விமர்சித்தது. 2020ஆம் ஆண்டில் மன்னிப்பு வழங்கப்பட்ட நேரத்தில் ICJ இன் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இயக்குனர் பிரடெரிக் ரவாஸ்கி கூறினார்.

“அத்தகைய மன்னிப்பானது தண்டனையின்மை மற்றும் நீதிக்கான அணுகல் தொடர்பான சர்வதேச நியமங்கள் மற்றும் தரங்களுடன் பொருந்தாது, மேலும் மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு கூட இராணுவத்திற்கு எந்தவொரு பொறுப்புக்கூறலிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது என்று நன்கு நிறுவப்பட்ட பொதுக் கருத்தை வலுப்படுத்துகிறது”.

மேலும், சட்டவிரோதமாக பொதுமக்கள் கொல்லப்படுவது போன்ற கடுமையான குற்றங்களுக்கு, அத்தகைய மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உரிமைக்கு முரணாக பொது மன்னிப்பு இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். 

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.