Monday, November 25, 2024

Latest Posts

நான் தமிழரசை விட்டு வெளியேறவே மாட்டேன்- இந்தத் தேர்தலில் எமது கட்சி 15 ஆசனங்களையாவது கைப்பற்ற வேண்டும்

“நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்குப் பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால், நான் கடைசி வரை போராடுவேன். நாங்கள் இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்களுக்கு இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடிநாதமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கட்சியே இலங்கைத் தமிழரசு கட்சி. அதனுடைய கொள்கை பிறழாது, அதனுடைய தாகம் தீராது, அதனுடைய அடிப்படை மாறாது எங்களுடைய கட்சி இப்போதும் நிலையான பயணத்தைச் செய்து வருகின்றது.

தற்போது நாட்டிலேயே மாற்றம் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றது. தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றமானது ஒரு மாயையாக இருக்கலாம். அல்லது நீண்ட பயணத்தினுடைய ஒரு தொடக்கமாகக் கூட இருக்கலாம். ஆனால், அது நல்லதாக இருந்தால் நாங்களும் அவர்களோடு கைகோர்க்கத் தயாராகவுள்ளோம் என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

சிங்களத் தலைவர்கள் இதயசுத்தியோடு தமிழர்களுக்கான அரசியல் தீர்வைத் தருவார்களா என நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

25 வருடங்களாக கிடப்பில் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, 2004ஆம் ஆண்டு தமிழீழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வெளியே வந்தது. அந்தக் கட்சியினுடைய பாரம்பரியம் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மீண்டும் ஒரு புதுப்பொலிவைப் பெற்றுப் பயணம் செய்து வருகின்றது.

நாம் குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற  ஆசனங்களை எடுக்க வேண்டும். அவ்வாறு பெற்றால் எங்களுக்கான மாற்றத்தைத் தரும் களமாக அது மாறும். அதிலிருந்து நாம் பின்வாங்கினால், எங்களுடைய மக்கள் சரியான முடிவுகளை எடுக்கத் தவறினால் நாங்கள் தோற்றுப் போன இனமாக  மாறிக்கொண்டே போவோம்.

பலர் நான் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனக் கூறுகின்றார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்குப் பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால், நான் கடைசி வரை போராடுவேன். பகிரங்கமாகச் சொல்கின்றேன் ஒரேயொரு கட்சி அரசியல் அது இலங்கைத் தமிழரசுக் கட்சியே.

நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற போதும் வழக்கை எதிர்கொண்டு வருகின்றேன். எனது கட்சிக்காரர்களே நான் தலைவராகச் செயற்படக்கூடாது என வழக்குகளைத்  தாக்கல் செய்துள்ளார்கள். அத்தனை சவால்களையும் தாண்டி இந்தக் கட்சியில் இருக்கின்றேன்.

ஒரு கட்சியாக ஒருங்கிணைய வேண்டும். அலைபாயக்கூடாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றபோதுதான் வரலாற்றின் வெற்றிகள் எங்களைத் தேடி வரும். இயற்கையும் வரலாறும் ஒரு காலமும் தவறுவிடாது.

அண்மை காலங்களிலே என் மீதான சேறுபூசல்கள் மிகப்பெரிய அளவிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மதுபான சாலைக்கான சிபாரிசு கடிதத்தைச் சிறீதரன் எம்.பி. வழங்கினார் என்று பலர் தவறான தகவல்களைப்  பரப்பி வருகின்றனர்.

என் மீதான தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகப் பொலிஸ் நிலையத்திலே முறைப்பாடு செய்துள்ளேன். வழக்கைத் தொடர்ச்சியாகவும் நடத்தவுள்ளேன். நான் இந்த விடயத்தை விடப்போவதில்லை.

நான் மதுபான சாலைக்கான சிபாரிசுக் கடிதத்தை நான் வழங்கியிருந்தால் அதனை வெளிப்படுத்தவும். அதனை வெளிப்படுத்தாமல் வெறுமனே ஊகங்கள் அடிப்படையில் எழுதுவதைத் தவிருங்கள். உண்மைகளை எழுதுங்கள்.

அரசியலில் உள்ளவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த காலத்தில் அரசியலுக்குள் வந்தவன் நான். என்னுடைய அரசியல் அரசியல் பயணம் என்பது வெறும் பஞ்சு மெத்தைக்குள் வந்ததல்ல. நான் கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்தவன்.

நான் மதுபான சாலைக்கான சிபாரிசுக் கடிதத்தைக் கொடுத்தவனும் அல்லன், இனிமேல் கொடுக்கப் போறவனும் அல்லன். என்னுடைய இனத்துக்கு விரோதமான, என்னுடைய கட்சிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்பதை இங்கு பகிரங்கமாகச்  சொல்ல விரும்புகின்றேன்.

என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர்களே என்னைப் பற்றி தவறாக எழுதுகின்றார்கள். சிலர் சொல்லுவதைக் கேட்டு மோசமாக எழுதினார்கள். அவை எல்லாவற்றையும் கடந்து வந்து பொறுமையோடும் நிதானத்தோடும் என்னுடைய அரசியலை மேற்கொண்டு வருகின்றேன்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.