எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய ஏனைய கட்சிகளுடைய தலைவர்களுடன் இணைந்து ஹர்த்தால் தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளனர் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (15) மாலை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ். இல்லத்தில் இடம்பெற்றது. இதன்பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் அனைவரும் பேசி இறுதி முடிவொன்றை எடுத்திருக்கின்றோம்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய ஏனைய கட்சிகளுடைய தலைவர்களுடன் இணைந்து ஹர்த்தால் தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளனர்.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளோம்.
எதிர்வரும் புதன்கிழமை திருகோணமலை மற்றும் வவுனியா வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டு ஹர்த்தால் தொடர்பான விடயங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
முல்லைத்தீவில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகாரலிங்கம் தலைமையில் நேற்று (14) வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டோம். எதிர்வரும் நாட்களில் கிளிநொச்சி வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடவுள்ளோம்.
அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம் மக்களுடைய ஒத்துழைப்புடனும் சகல தமிழ்த் தரப்புக்களின் ஒத்துழைப்புடனும் இந்தக் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் மக்களுக்கான நீதி என்பது தொடர்ந்து மறுதலிக்கப்படுகின்றது என்பதை வலியுறுத்தியும், சிங்கள பௌத்த மக்கள் வாழாத தமிழ், முஸ்லிம் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் தொடர்ச்சியாகக் காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் நிறுவுவதற்கான வேலைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுவதைக் கண்டித்தும் நிறுத்தக் கோரியும், மட்டக்களப்பு – மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றோம்.” – என்றார்.
ஹர்த்தால் தொடர்பான இன்றைய முன்னாயத்தக கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.