Friday, October 18, 2024

Latest Posts

தமிழரின் குரலாக ஓங்கி ஒலிப்பவர்களைநாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்!

“தெற்கில் ஏற்ப்பட்ட மாற்றத்துக்கான அலையில் தமிழ் மக்கள் சிக்கிவிடாது தமிழ்ப் பிரதேசங்களின் இருப்புக்களையும், பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர வேண்டும். தமிழ் மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டிய அவசியம் தொடர்பில் தாயக மக்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்ச் சொந்தங்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடகக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தெற்கில் இன்று அரசியல் மாற்றம் ஒன்று உருவாகியுள்ளது. அந்த மக்கள் மாற்றம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து அநுரவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். வடக்கு – கிழக்கிலும் அவ்வாறான ஒரு மாற்றம் வரவேண்டும் என்று பலரும் சிந்திக்கின்றார்கள். அந்த மாற்றத்துக்குள் பல விடயங்கள் இருக்கின்றன.

நாடு பொருளாதாரச் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து ஊழல்வாதிகளால் சூறையாடப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டில் ஒரு புதிய யுகத்தை  ஏற்ப்படுத்துவதற்காக சிங்கள மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். அதனை நாம் வரவேற்கின்றோம். அதற்கான பங்களிப்புக்களை வழங்குவதற்கு நாங்களும் தயாராக இருக்கின்றோம்.  

இதேவேளை, தெற்கு சிங்கள மக்கள் விரும்புகின்ற மாற்றமும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களும் ஒன்றல்ல. இரண்டையும் நாம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. இலஞ்சத்தையும் ஊழலையும் அகற்றினால் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா? அல்லது அதனை மாத்திரம் நாம் மாற்றம் என்று கூறமுடியுமா?

இன்று வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்பரம்பல் செயற்பாடுகள் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. சமகாலத்தில் திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப்  பெறுவதே கடினம் என்ற நிலை  ஏற்ப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்திலும் இந்த நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, தமிழ் மக்களின் இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவர் முன்னும் இருக்கின்றது. இது தொடர்பாக நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

ஏற்கனவே அதிகளவான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளமையால் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவடைந்து செல்லும் நிலைமையைக் காண்கின்றோம். இந்தநிலையில் மாற்றத்தை விரும்பி நீங்கள் அளிக்கின்ற வாக்குகளால் எமது பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து சிங்களப்  பிரதிநிதிகளே நாடாளுமன்றத்துக்குச் செல்வர். அவர்களுக்குத் தமிழர்களின் பிரதான பிரச்சினைகளே தெரியாது. அவர்கள் எமக்காகப் பேசுவார்கள் என நம்ப முடியுமா?

நாம் ஈழ விடுதலைப் போராட்டத்தில் எத்தனை ஆயிரம் போராளிகளை இழந்துவிட்டோம். எத்தனை உயிர்களை இழந்திருக்கின்றோம். பலர் அங்கவீனமுற்று அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லை. இவை தொடர்பாக சிங்களப் பிரதிநிதிகளால் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியுமா? அல்லது அவர்களால் சர்வதேசத்துக்குத்தான் தெரியப்படுத்த முடியுமா.

இந்த நிலைமையில் நாம் தேசிய கட்சிகளுக்கு அளிக்கின்ற வாக்கானது அவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதுடன் 50 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் விடுதலை வேட்கையை நீர்த்துப் போகச் செய்யும் நிலையை ஏற்ப்படுத்தும்.

எனவே, தெற்கில் ஏற்ப்பட்ட மாற்றத்துக்கான அலையில் தமிழ் மக்கள் சிக்கிவிடாது தமிழ்ப் பிரதேசங்களின் இருப்புக்களையும், பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர வேண்டும். தமிழ் மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டிய அவசியம் தொடர்பில் தாயக மக்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்ச் சொந்தங்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தொடர்ச்சியான தேர்தல்களில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் சலுகை அரசியலைப் புறம் தள்ளி உரிமை அரசியலைப் பேசுகின்ற தமிழ்த் தேசிய கட்சிகளுக்கே தமது ஏகோபித்த ஆதரவை வழங்கி வந்திருக்கின்றனர்.

எனவே, இந்தத் தேர்தலிலும் தடம்மாறாது தமிழ்த் தேசியத்தின் இருப்பைப்  பாதுகாப்பதற்கு ஒற்றுமையோடு அணிதிரள வேண்டும்என்று தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.