வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில தினங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், கால நிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து அடிக்கடி மக்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
நாட்டில், கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையால், 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று மாலை தெரிவித்துள்ளது.
தெஹியோவிட்ட, தம்புத்தேகம மற்றும் யட்டிநுவர பகுதிகளிலே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் 335 வீடுகள் பகுதியளவிலும் சிலவீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
கேகாலை மாவட்டத்திலே அதிகளவான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடுங்காற்றினால் மரங்கள் முறிந்து வீடுகளில் விழுந்ததில் பல வீடுகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இன்னும் சில இடங்களில்,ஏற்பட்ட மண் சரிவுகளால் ரயில் போக்குவரத்துகளும் பாதிப்புற்றன. அணைக்கட்டுகளின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால்,தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.இடி மற்றும் மின்னல்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் பொருட்டு, வௌியிடங்களில் நடமாடுவதை தவிர்க்கும்படியும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல்களில் மீன்பிடிப்போரும் மற்றும் கடல் சமூகத்தினரும் இது குறித்து கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருகோணமலை முதல் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.