சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இத்தகவலை தெரிவித்த சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில் ,
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். போதைப்பொருள் நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருகிறது. சிறைச்சாலைகளில் 805 ஆண்கள் தூக்கிலிடப்பட உள்ளனர். இதேபோன்று 21 பெண்களும் தூக்கிலிடப்படவேண்டிய பட்டியலில் உள்ளனர். 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளனர் . பாதாள உலக நடவடிக்கைகளில் தெற்கு முதலிடத்தில் உள்ளது.
படித்த ஒரு சமூகம் எவ்வாறு கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக மாறியுள்ளது என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அவர்கள் எவ்வாறு பெரிய அளவில் போதைப்பொருட்களைக் கொண்டு வந்து நாட்டை அழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்தார்கள்?
இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தான். அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். அவர்கள் ஒரு தேசத்தையே அழிக்கிறார்கள். எனவே, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அது பாவமான செயல் அல்ல ‘ என்றார்.
