நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய வரைவாக அமைச்சரவையில் மீண்டும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் மற்றும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் சிவில் அமைப்புக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றாலும், சகல தரப்பினரதும் ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு புதிய சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சட்டமூலத்தை திருத்துவதற்கு பதிலாக இந்த சட்டமூலத்தை மீளப்பெற்று புதிய சட்டமூலத்தை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் நீதிமன்றில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.