மாடு திருடர்களுக்கு பாடம் புகட்ட வருகிறது புதிய சட்டம்

0
289

மாடு திருடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ. 100,000  ஆக அதிகரிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. குற்றத்திற்காக குறைந்தபட்சம் ஒரு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான சரத்துக்களை உள்ளடக்கி விலங்குகள் நலச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு கால்நடை அபிவிருத்தி பிரிவு அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார்.

தற்போது நாடளாவிய ரீதியில் மாடு திருட்டுகள் அதிகரித்து வருவதாகவும், தற்போதுள்ள விலங்குகள் நலச்சட்டத்தின் கீழ், மாடு திருடினால் அதிகபட்ச அபராதம் ரூ. 50,000 என்றும், குற்றத்திற்கான சிறைத்தண்டனை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கோரிக்கைக்கு அமைய விலங்குகள் நலச் சங்கப் பிரதிநிதிகள் குழுவுடன் விலங்குகள் நலச் சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சில் நேற்று நடைபெற்றது.

கறவை மாடு திருட்டு அதிகரிப்பு மற்றும் பசு மாடு திருடுபவர்களுக்கான தண்டனைகள் தொடர்பான சரத்துக்களில் புதிய திருத்தங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தற்போதைய அபராதத் தொகையை ரூ. 100,000 ஆக உயர்த்தவும் அமைச்சர் அறிவுறுத்தினார். கறவை மாடு திருடப்பட்ட வழக்கில் 100,000 ரூபாய் அபராதம் விதித்து ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கூறினார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு அதிகளவு பால் கொடுத்த பசுவும் கடந்த வாரம் திருடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அந்த பசுவிடமிருந்து ஒரு நாளைக்கு குறைந்தது 26 லிட்டர் பால் கிடைத்தது.

மாடு திருட்டை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கம்பஹா மாவட்டம் நாட்டிலேயே அதிக மாடு திருட்டு மாவட்டமாக திகழ்வதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here