யால தேசிய பூங்காவிற்குள் கண்மூடித்தனமாக ஓடிய வாகனங்களிற்கு வழிகாட்டிகளாக செயற்பட்டவர்களும் தேசிய பூங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நிலைமையை கட்டுப்படுத்த தவறியமைக்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
யாலதேசிய பூங்காவிற்குள் நுழைந்த சில வாகனங்கள் கண்;மூடித்தனமாக ஓடுவதையும் சாகசங்களில் ஈடுபடுவதையும் வனவிலங்குகளை துன்புறுத்துவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார். அவர்களுடைய பதவிகள் சமூக அந்தஸ்த்தை கருத்தில் கொள்ளாமல் அவர்களை கைதுசெய்யுமாறு அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.குறிப்பிட்ட நபர்களும் வாகனங்களும் தேசிய பூங்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய பூங்காவிற்குள் விலங்குகளை துன்புறுத்துபவர்கள் அவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாலதேசிய பூங்காவிற்குள் வாகனங்களை பயன்படுத்தி வனவிலங்குகளிற்கு பாதிப்பை இடையூறை ஏற்படுத்தியவர்களிற்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார் வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.