மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக கீர்த்தி தென்னகோன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கு இன்று (26) நீதவான் ஹர்ஷன கெகுலவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அஜித் நிவாட் கப்ரால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பத் மெண்டிஸ், இந்த தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் முதன்மைக் குற்றச்சாட்டு நவம்பர் 2021 இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆராயப்பட்டது என்றார்.
விசாரணையின் பின்னர் குற்றச்சாட்டு முற்றாக நிராகரிக்கப்பட்டது என ஜனாதிபதியின் சட்டத்தரணி சம்பத் மண்டிஸ் நீதிமன்றில் உண்மைகளை சுட்டிக்காட்டினார்.
குற்றச்சாட்டுகளை முன்வைத்த கீர்த்தி தென்னகோன் ‘சுத்தமான கைகள் இல்லாமல்’ நீதிமன்றத்திற்கு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விளக்கமளித்த ஜனாதிபதியின் சட்டத்தரணி, ஒருவர் ஒருதலைப்பட்சமாக குறிப்பிட்ட தீர்மானத்தை கோரும் போது, நீதிமன்றத்தை அணுகும் நபரின் கோரிக்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றார்.
அப்படி இருந்தும், தென்னகோன் மிக முக்கியமான தகவல்களை மறைத்து நீதவானை தவறாக வழிநடத்த முயன்றுள்ளார்.
அந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து உண்மைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்குமாறு நீதவான் ஹர்ஷன கெகுலவல உத்தரவிட்டதுடன், இன்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு பிரதிவாதி நிலையை அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரூ. 1 மில்லியன் பிணை விதிக்கப்பட்டு, அடுத்த விசாரணை நவம்பர் 24, 2022 என நிர்ணயிக்கப்பட்டது. தென்னகோன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆஜராகியிருந்தார்.