2022 இல் அதிக ஏற்றுமதி வருமானமாக 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

Date:

இலங்கையில் கைத்தொழில் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்காக ஒதுக்குவதே எமது இலக்கு என்று கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எமது நாட்டின் வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானமாக ஈட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்த காலத்தில், தேசிய உற்பத்திகளை அதிகரிக்கவும் அதேபோன்று ஏற்றுமதியை உயர்த்தவும் நமது நாட்டு தொழில் முயற்சியாளர்கள் தமது பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இதன்மூலம் 2022 ஆம் ஆண்டு நமது நாட்டின் வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானமாக 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

நாம் ஏற்கனவே 03 புதிய கைத்தொழில் பேட்டைகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். களுத்துறை மாவட்டத்தின் மில்லெனிய, காலி மாவட்டத்தின் எல்பிடிய, கண்டி மாவட்டத்தின் பொத்தபிடிய ஆகிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பித்துள்ளோம்.

மேலும், கைத்தொழில் துறையின் மேம்பாட்டுக்கு நிதி ரீதியிலான ஒத்துழைப்புகளை வழங்கக் கூடிய வகையில் போதிய நிதி நிறுவனங்கள் எமது நாட்டில் இல்லாமை ஒரு பாரிய குறைபாடாக உள்ளது. எனவே அதனை நிவர்த்தி செய்ய கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக பல்வேறு கடன் திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றோம்.

அதேபோன்று, எமது நாட்டு கைத்தொழில் துறையினர் எதிர்கொள்ளும் மற்றுமொரு பிரச்சினைதான் கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி பெற்றுக்கொள்வது தொடர்பில் உள்ள சிக்கலான நிலைமை. பல்வேறு அரச நிறுவனங்களுக்குச் சென்று அதிகளவிலான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதுடன் அதிக காலத்தை இதற்காக செலவிட வேண்டிய நிலைமையும் காணப்படுகின்றது. இது புதிய தொழில் முயற்சியாளர்களை விரக்தி அடையச் செய்கின்றது. எனவே எமது நாட்டின் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் அனுமதி பெறல் தொடர்பான விடயத்தை இலகுபடுத்த அவசியமான பணிகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இலங்கையின் கைத்தொழில் துறை அபிவிருத்திக்கான தேசிய கொள்கை (NAPID) தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய கொள்கை கட்டமைப்பில் (2023-2048) இணைத்துக்கொள்ள பொருளாதார ஸ்திரப்படுத்தல் புத்தெழுச்சி மற்றும் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான குழு தீர்மானித்துள்ளது.

அதேபோன்று, கடந்த வருடம் இலத்திரனியல் கருவிகள், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியிலும் குறிப்பிடத்தக்களவு வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளோம். மேலும் அச்சு மற்றும் பொதியிடல் உட்பட மருந்து உற்பத்தி மற்றும் குளியலறை சாதன உற்பத்திகளும் அதன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளன.” என்று கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...