Friday, January 3, 2025

Latest Posts

சம்பந்தனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் விக்கி

சம்பந்தன் வடக்கு , கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் கேள்வி – பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் முழு விவரம் வருமாறு, கேள்வி -சம்பந்தன் பதவி விலகல் சம்பந்தமான விடயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் – அவர் தாம் பதவி விலகத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அவரைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தனின் பாராளுமன்றக் காலம் 2025 வரை என்று இருந்தாலும் பாராளுமன்றம் அதற்கு முன்னர் கலைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம்.வடக்கு, கிழக்குத் தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் தமது குரலையும் உடலையும் வெளிக்காட்டுவது தான் அவர்களின் கடமை என்று நினைப்பது தவறு. தமிழ் மக்களின் வருங்காலம் பாராளுமன்றத்தால் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களின் விருப்புடன் சுமுகமாக நிர்ணயிக்கப்படப் போவதில்லை. ஊரறிய உலகறிய எமது அவலங்களை வெளிநாட்டு அரசாங்கங்களுக்குத் தெரியப்படுத்தி, இலங்கை சம்பந்தமான பொதுக் கருத்தை வெளிநாடுகளில் எமது புலம்பெயர் சகோதரர் வாயிலாக எழ வைத்து எமது நாட்டின் அரசாங்கத்துக்கு போதிய நெருக்குதல்களை ஏற்படுத்தினால்தான் ஏதாவது நடக்கும்.சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை பாரப்படுத்தினால் எமக்கு நன்மைகள் கிடைக்கலாம்.

அப்போதுகூட சீனாவிடம் முழுமையாக சரணாகதி அடைய சிங்கள அரசியல்வாதிகள் ஆயத்தமாக உள்ளார்கள். தமிழர்களின் உரிமைகளை வழங்குவதிலும் பார்க்க எவரிடமும் நாம் மண்டியிடத் தயார் என்பதே அவர்களின் மனோநிலை.இந்த விதத்தில் தமிழ் மக்களின் தற்போதைய நிலையை அறிய அவர்களின் இதுவரை கால அவலங்களை அறிய, அவர்களின் அபிலாஷைகளை அறிய வெளிநாட்டுத் தூதுவர் அகங்கள் நாடும் முக்கிய நபர் சம்பந்தனே. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்கூட அண்மையில் அவரின் வாசஸ்தலம் சென்று அவரை சந்தித்தார். அவர் பேசுவது விளங்காவிட்டாலும் பக்கத்தில் இருந்து அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்த சுமந்திரன் போன்றவர்கள் முன்வரவேண்டும்.

அவரைப் புறக்கணிக்கவோ நீக்கவோ நடவடிக்கை எடுக்காமல் அவரின் பங்கை தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதே – அவரின் பெயரைச் சொல்லி இதுவரை காலமும் அரசியல் நடத்தியோரின் கடமையாகும். வெளி உலகம் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ் தலைவராக நினைக்கின்றது. அவரைப் புறக்கணிக்கவோ நீக்கவோ முனைவது தமிழ் மக்களுக்கு இடையூறை விளைவிக்கும். அவர் வட, கிழக்குத் தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.

அவரில் பல குறைகள் இருந்துள்ளன – இருக்கின்றன. ஆனால், யாரிடந்தான் குறைகள் இல்லை? அதுவும் தமிழர்கள் மத்தியில் ஒரு தமிழர் பற்றி இன்னொரு தமிழரிடம் கேட்டால் யாரும் நினையாத குறைகள் எல்லாம் நிறைந்தோடி வெளிவந்து விடுவன. இதனால்தான் நான் அண்மையில் ஓர் ஊடகம் என்னிடம் கேள்வி கேட்டபோது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு கூட்டுத் தலைமை தேவையென்றேன். மாவை சேனாதிராஜா, சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் அந்தக் கூட்டுத் தலைமையில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் கூறினேன். தீர்மானங்கள் அவர்கள் மூவராலும் ஒருமித்து எடுக்கப்பட வேண்டும் என்றேன்.

சம்பந்தனை இருக்க விடுங்கள். தற்போதைய பாராளுமன்ற காலம் முடிவடையும்போது அவரின் அங்கத்துவம் தானாகவே முடிந்துவிடும். திருகோணமலை மக்களின் தேவைகளைப் பார்க்க – பாதுகாக்க சம்பந்தன் ஒரு தகுந்த அமைப்பை உண்டு பண்ணுவார். இல்லை என்றால் அதனை அமைக்க இலங்கை தமிழரசுக் கட்சி அவருக்கு உதவி வழங்க வேண்டும். சம்பந்தனை வெளியேற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. சம்பந்தன் அவர்கள் தனது சுயசரிதையை அல்லது தனது காலத்தில் நடந்த முக்கிய அரசியல் சந்திப்புகள் பற்றி ஒரு நூலை வெளியிட முன்வர வேண்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.